Video image ani
இந்தியா

இதுக்கு என்டே இல்லையா..! நாக்பூர் வன்முறைக்கு காரணமான நபர் வீட்டில் பாய்ந்த புல்டோசர் நடவடிக்கை!

நாக்பூர் வன்முறைக்குக் காரணமான நபர் வீட்டில் புல்டோசர் நடவடிக்கை பாய்ந்துள்ளது.

Prakash J

மகாராஷ்டிராவில் சத்ரபதி சம்பாஜி நகரில் உள்ள ஔரங்கசீப்பின் கல்லறையை அகற்றக் கோரி சில இந்து அமைப்புகள் போராட்டங்கள் நடத்திவருகின்றன. அந்த வகையில், கடந்த மார்ச் 17ஆம் தேதி நாக்பூரில் வன்முறை வெடித்தது. பின்னர், வன்முறை தொடர்பாக 92 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக பேசிய முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ், “வன்முறை சம்பவத்தைத் தொடர்ந்து, காவல்துறையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், சிலர் பாட்காஸ்ட்கள் மற்றும் சமூக ஊடகப் பதிவுகள் மூலம் புனித 'சாதர்' எரிக்கப்பட்டதாக வதந்தியைப் பரப்பினர். இதனால் நாக்பூரில் கலவரக்காரர்கள் கற்களை வீசி, வாகனங்களை எரித்து, கடைகளைத் தாக்கினர். வன்முறையின் போது ஏற்பட்ட சேதங்கள் கலவரக்காரர்களிடமிருந்து வசூலிக்கப்படும். அவர்கள் பணத்தைச் செலுத்தவில்லை என்றால், அவர்களின் சொத்துகள் மீட்புக்காக விற்கப்படும். தேவைப்படும் இடங்களில் புல்டோசர்களும் பயன்படுத்தப்படும்” எனக் கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாக்பூர் வன்முறைக்குக் காரணமானதாகக் கூறப்படும் ஃபஹீம் கானின் வீட்டில் இன்று புல்டோசர் நடவடிக்கை தொடங்கியது. அவருடைய வீட்டில் சில பகுதிகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டன. குற்றம்சாட்டப்பட்டுள்ள ஃபஹீம் கான் மார்ச் 19 அன்று கைது செய்யப்பட்டு சிறையைல் அடைக்கப்பட்டுள்ளார். சிறுபான்மையினர் ஜனநாயகக் கட்சியின் தலைவராக உள்ள அவர், வன்முறையின்போது வீடியோவை திருத்தி வைரலாக்கியதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.