பாகிஸ்தான் எல்லையில் தாக்குதலை நடத்திவிட்டு ''எதிரிகளுக்கு முன் நீ கண்ணியமாக இருந்தால் அவர்கள் உன்னை கோழையாக நினைப்பார்கள்'' என்ற கவிதையை இந்திய ராணுவம் பகிர்ந்துள்ளது.
புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் இன்று காலை அதிரடி தாக்குதலில் ஈடுபட்டது. பாகிஸ்தான் எல்லையையொட்டிய பயங்கரவாதிகள் முகாம் மீது இந்திய ராணுவம் 1000 கிலோ அளவிலான குண்டுகளை பொழிந்தது. ஜெய்ஷ் இ முகமது, லஷ்கர் இ தொய்பா, ஹிஜ்புல் முஜாகிதீன் ஆகிய பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்து இந்தியா தாக்குதல் நடத்தியது. அத்துடன் பாகிஸ்தானில் நுழைந்து கைபர் பக்துன்வா பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் முகாமை குறிவைத்தும் இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்தது.
பயங்கரவாத முகாம்கள் மீது தாக்குதல் நடத்திய இந்திய விமானப்படைக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தாக்குதல் நடைபெற்று சில மணி நேரங்களில் இந்திய ராணுவ கூடுதல் இயக்குனர் ஜெனரல் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் கவிதை ஒன்றை பதிவு செய்துள்ளது. இந்தி கவிஞரான ராம்த்ரி சிங்கின் அந்தக் கவிதையை 'எப்போதும் தயார்' என்ற ஹேஷ்டேக்குடன் இந்திய ராணுவம் பதிவு செய்துள்ளது.
கவிதையின் தமிழாக்கம்:
''எதிரிகளுக்கு முன்
நீ சாந்தமாகவும், சாதுவாகவும் இருந்தால்
அவர்கள் உன்னைக் கோழையாக நினைக்கக்கூடும்.
பாண்டவர்களை கவுரவர்கள் நடத்தியதை போல'' என்று உள்ளது.
மேலும் ''நீ வலிமையாக இருந்து வெற்றி பெறும் தருணத்தில் இருக்கும் நேரம் தான் அமைதி வலியுறுத்தப்படும்'' என்றும் தெரிவித்துள்ளது. பலரும் அந்தக் கவிதையை பகிர்ந்து இந்திய ராணுவத்துக்கு பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.