இந்தியா

‘ஹலோ ஆளுநர் அலுவலகமா?’ ஜோக் அடித்த உச்சநீதிமன்ற நீதிபதி!

‘ஹலோ ஆளுநர் அலுவலகமா?’ ஜோக் அடித்த உச்சநீதிமன்ற நீதிபதி!

rajakannan

எடியூரப்பா அரசு மீது நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ள நிலையில், இந்த வழக்கில் இன்று காரசார விவாதம் நடைபெற்றது. விசாரணையின் போது உச்சநீதிமன்ற நீதிபதி சிக்ரி வாட்ஸ் அப் ஜோக் சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தார்.

கர்நாடகாவில் எடியூரப்பாவை, ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அரிய நிகழ்வாக நேற்று முன் தினம் நள்ளிரவில், உச்சநீதிமன்றத்தில்‌ இந்த வழக்கு விசாரிக்கப்பட்டது. இந்த நிலையில் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, எஸ்.ஏ.பாப்தே, அசோக் பூஷன் அமர்வில் இன்று காலை வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்ற உத்தரவுப்படி பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ஆட்சியமைக்க உரிமை கோரி எடியூரப்பா ஆளுநருக்கு அளித்த 2 கடிதங்களையும் தாக்கல் செய்தார். 

இதனை அடுத்து காங்கிரஸ் தரப்பில் ஆஜரான அபிஷேக் மனு சிங்வி, கர்நாடகாவில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் எடியூரப்பா அரசுக்கு 15 நாட்கள் அவகாசம் அளித்திருப்பது குதிரை பேரத்திற்கு வழி வகுத்திருப்பதாகவும் கூறினார். அப்போது குறுக்கிட்ட பாஜக தரப்பு வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, 15 நாட்கள் அவகாசம் என்பது ஆளுநரின் முடிவு என கூறினார். 

இதனை கேட்ட நீதிபதிகள் கர்நாடகாவில் தற்போது எண் விளையாட்டு நடப்பதாகவும், எண்களில் ஆளுநர் திருப்தியடைய வேண்டும் என்றும் தெரிவித்தனர். மேலும் காங்கிரஸ் - மஜத கூட்டணிக்கு பெரும்பான்மை இருப்பதாக கூறிய நிலையில், ஆளுநர் எடியூரப்பாவை அழைத்தது ஏன்? என வினவினர். 

இதனிடையே முகுல் ரோஹத்கி, நம்பிக்கை வாக்கெடுப்பின் போது காங்கிரஸ் மற்றும் மஜத எம்எல்ஏக்கள் சிலர் பாஜகவுக்கு ஆதரவளிப்பர் எ‌ன கூறினார். இதனை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்துவதே சிறந்த முடிவாக இருக்கும் என தெரிவித்தனர். எடியூரப்பா நாளையே பெரும்பான்மையை நிரூபிக்கத் தயாரா? என வினவினர். அதற்கு காங்கிரஸ் கூட்டணி நாளை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு தயார் என அபிஷேக் மனு சிங்வி கூறினார். 

அப்போது குறுக்கிட்ட முகுல் ரோஹத்கி, காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ரிசார்டுகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர், அவர்களை அழைத்து வர வேண்டும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கு என நிறைய பணிகள் உள்ளன. எனவே திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்குமாறு கேட்டார். இதற்கு காங்கிரஸ்-மஜத தரப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, எம்எல்ஏக்கள் சொந்த விருப்பத்தின் பேரிலேயே அங்கு தங்கி இருப்பதாக தெரிவித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திங்கள்கிழமை வரை அவகாசம் வேண்டும் என்ற பாஜகவின் கோரிக்கையை நிராகரித்து, நாளையே நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டனர்.

இந்த அனல் பறக்கும் விசாரணையின் போது, நீதிபதி ஏ.கே.சிக்ரி வாட்ஸ்அப் ஜோக் ஒன்றை சொல்லி எல்லோரையும் சிரிக்க வைத்தார். 

“ஹலோ இது ஆளுநர் அலுவலகமா?

ஆம்.

என்னிடம் 113 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். என்னை நீங்கள் முதலமைச்சர் ஆக்குவீர்களா?

யார் நீங்கள்?

நான் தான் எம்.எல்.ஏக்கள் தங்கியிருக்கும் ஹோட்டலின் உரிமையாளர்” இதுதான் அந்த ஜோக். இந்த ஜோக்கை கேட்டதும் அனைவரும் சிரித்துவிட்டார்கள்.