இந்தியா

“பாக்கி 8 லட்சம் ரூபாயை கட்டிவிட்டு சடலத்தை எடுங்கள்” தனியார் மருத்துவமனை அடாவடி

jagadeesh

மகாராஷ்ட்டிரா மாநிலம் தானேவில் தனியார் மருத்துவமனையொன்று கொரோனா பாதிக்கப்பட்டு உயிரிழந்த பெண்ணின் உடலை முழு மருத்துவக் கட்டணத்தை செலுத்தாததால் தர மறுத்துள்ள சம்பவம் நிகழ்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் ஆகஸ்ட் 17 ஆம் தேதி தானேவில் இருக்கும் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏறக்குறைய 39 நாள்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அந்தப் பெண் வியாழக்கிழமை இரவு உயிரிழந்தார். இத்தனை நாட்களுக்கு மொத்தமாக ரூ.24 லட்சத்தை கட்டணமாக தரும்படி பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவருக்கு தெரிவித்துள்ளது மருத்துவமனை நிர்வாகம்.

பெண் அனுமதிக்கப்பட்ட அந்த மருத்துவமனை கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கானது அல்ல. ஆனாலும் அந்தப் பெண் மிகவும் மோசமான நிலையில் இருந்தபோது மருத்துவமனை நிர்வாகம் அவரை சிகிச்சைக்கு அனுமதித்துள்ளது. மொத்த கட்டணமான ரூ.24 லட்சத்தில் அந்தப் பெண்ணின் குடும்பத்தினர் ரூ.16 லட்சத்தை ஏற்கெனவே கட்டிவிட்டனர்.

ஆனால் அந்தப் பெண் உயிரிழந்தவுடன் மீதமுள்ள ரூ.8 லட்சத்தை கொடுத்தால்தான் சடலத்தை தருவோம் என மருத்துவமனை நிர்வாகம் கூறியதாக உயிரிழந்த பெண்ணின் கணவர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் சமூக வலைத்தளங்களிலும் பரவலாக பேசப்பட்டது. இதனையடுத்து இது குறித்து விளக்கமளித்துள்ள மருத்துவமனை நிர்வாகம் இந்தக் குற்றச்சாட்டுக்கு மறுப்பு தெரிவித்துள்ளது.

அதில் "உயிரிழந்த பெண்ணின் கணவர்தான் சடலத்தை ஓர் இரவு வைத்துக்கொள்ளுமாறும், காலையில் சடலத்தை கொண்டு செல்கிறோம் என கூறினார். நாங்கள் முறைப்படி தானே நகராட்சிக்கு தகவல் தெரிவித்தோம். மேலும், அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளித்த காலக் கட்டத்தில் கூடுதல் வெண்ட்டிலேட்டர்களை கேட்டோம், அதைக் கூட தானே நகராட்சி நிர்வாகம் கொடுக்கவில்லை" என தெரிவித்துள்ளது.