இந்தியா

ஸ்மார்ட்போன் வாங்க ஆசைப்பட்டு தன் ரத்தத்தையே விற்க முயன்ற சிறுமி! - சிக்கியது எப்படி?

Sinekadhara

மேற்குவங்கத்தில் ஸ்மார்ட்போன் வாங்க ஆசைப்பட்டு தனது ரத்தத்தை விற்க சிறுமி ஒருவர் துணிந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவருக்குமே ஸ்மார்ட்போன் ஆசை இருக்கத்தான் செய்கிறது. அதிலும் கொரோனா பொதுமுடக்கத்தால் ஆன்லைன் வகுப்புகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்ததிலிருந்து மாணவர்களிடையே செல்போன் பயன்பாடும் அதிகரித்துவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். இந்த ஆசையின் தொடர்ச்சியால் குடும்பத்தின் வறுமை காரணமாக தனது ரத்தத்தை விற்று ஸ்மார்ட்போன் வாங்க முயற்சித்துள்ளார் 16 வயது சிறுமி.

தாபானைச் சேர்ந்த சிறுமி, திங்கட்கிழமை காலை 10 மணியளவில் டியூஷன் செல்வதாகக் கூறிவிட்டு, தனது சைக்கிளை பேருந்து நிலையத்தில் நிறுத்திவிட்டு, அங்கிருந்து பேருந்தில் ஏறி 30 கி,மீ தொலைவிலுள்ள பலூர்காட் மாவட்ட மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ரத்த வங்கிக்குச் சென்ற சிறுமியை அங்கிருந்த ஊழியர்கள் சைல்டுலைன் இந்தியாவிற்கு தகவல் தெரிவித்ததன்பேரில் மாவட்ட குழந்தைகள் நலக் குழுவின் உதவியுடன் பெற்றோரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதுகுறித்து ரத்த வங்கி ஊழியர் கனக் குமார் தாஸ் கூறுகையில், ‘’காலை 10 மணியளவில் சிறுமி ஒருவர் எங்களிடம் வந்தார். இதுதான் மாவட்ட ரத்த வங்கி மருத்துவமனை என்பதால் ஆரம்பத்தில் அவர் ரத்தம் பெறத்தான் வந்திருக்கிறார் என்று நினைத்தோம். ஆனால் அவர் எங்களிடம் அவருடைய ரத்தத்தை விற்பனை செய்யவந்திருப்பதாக கூறியதைக் கேட்டு அதிர்ச்சியடைந்தோம். ஆரம்பத்தில் அவரிடம் விசாரித்ததில், சிறுமியின் தம்பி 4ஆம் வகுப்பு படிப்பதாகவும், அவருடைய மருத்துவச்செலவுக்கு பணம் தேவைப்படுவதால் தனது ரத்தத்தை விற்க வந்ததாகவும் கூறினார். ஆனால் அவருக்கு சிறிது ஆலோசனை கூறியபிறகு, அவர் ஸ்மார்ட்போன் வாங்க பணம் தேவைப்பட்டதால் ரத்தத்தை விற்க முன்வந்த உண்மையை கூறினார். அவர் ஏற்கனவே உறவினரின் செல்போனிலிருந்து ஆன்லைன் போன் ஆர்டர் செய்துவிட்டதாகவும் கூறினார்’’ என்று கூறியுள்ளார்.

சிறுமி மைனர் என்பதால் ரத்த வங்கி அதிகாரிகள் 1098 சைல்டுலைனுக்கு தகவல் கொடுத்தனர் என்றும் எனவே தான் மருத்துவமனைக்கு விரைந்து வந்ததாகவும் குழந்தைகள் மனநல ஆலோசகர் ரிட்டா மஹதோ கூறியுள்ளார். அவரிடம் விசாரித்ததில் அவர் ஞாயிற்றுக்கிழமை ஆன்லைனில் ரூ.9000 மதிப்புள்ள செல்போனை ஆர்டர் செய்திருப்பதாகவும், அது வியாழக்கிழமை வந்துவிடும் எனவும் கூறியதாகவும் தெரிவித்தார். பின்னர் சிறுமியின் குடும்பத்தாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிறுமியின் தந்தை கூறுகையில், ‘’நான் பக்கத்திலுள்ள ஒரு மார்க்கெட்டில் காய்கறி விற்பனை செய்துவருகிறேன். எனது மனைவி வீட்டை பார்த்துக்கொள்கிறார். எனது மகன் 4ஆம் வகுப்பு படித்துவருகிறான். எனது மகள் வெளியே சென்றபோது, நான் வீட்டில் இல்லை. ரத்தம் கொடுத்தால் பணம் கிடைக்கும் என்ற விஷயம் அவளுக்கு எப்படி தெரிந்தது என்றுகூட எனக்கு தெரியவில்லை’’ என்று கூறியிருக்கிறார்.