இந்தியா

பொதுமுடக்கத்திலும் நெடுஞ்சாலையில் குதிரைப் பயணம் : சர்ச்சையில் பாஜக எம்.எம்.ஏவின் மகன்

webteam

கர்நாடக பாஜக எம்.எல்.ஏவின் மகன் பொதுமுடக்கத்திற்கு இடையே நெடுஞ்சாலையில் குதிரைப் பயணம் செய்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியா முழுவதும் தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமலில் உள்ளது. வீட்டிலிருந்து வெளியே செல்லும் மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே செல்ல வேண்டும் என்றும், முக்கிய தேவைகளுக்காக மாஸ்க் அணிந்துகொண்டு பாதுகாப்புடன் செல்ல வேண்டும் எனவும் மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தியுள்ளன.

இந்நிலையில் கர்நாடகாவின் குண்டல்பேட்டை தொகுதி எம்.எல்.ஏ-வான நிரஞ்சன் குமாரின் மகன் நெடுஞ்சாலையில் குதிரைப் பயணம் சென்றிருக்கிறார். அதனை சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. எம்.எல்.ஏ-வின் மகன் என்பதால் பொதுமுடக்கத்திலும் தேவையற்ற குதிரைப் பயணத்தை மேற்கொண்டிருப்பதாகவும், அவர் முகக்கவசம் கூட அணியவில்லை என்றும் பலர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் விளக்கமளித்த பாஜக எம்.எல்.ஏ நிரஞ்சன் குமார், “அந்த வீடியோவில் இருப்பது என் மகன் தான். நெடுஞ்சாலையில் குதிரைப் பயணம் செய்யக்கூடாது என எந்த விதியும் இல்லை. நான் நேற்று பெங்களூரில் இருந்தேன். இன்று தான் மைசூர் வந்தேன். அதனால் என்ன நடந்தது எனத் தெரியவில்லை. என் மகன் செய்தது தவறாக இருந்தால், அவரிடம் புரிய வைப்பேன். அவரை காப்பாற்ற மாட்டேன். எது சரி, எது தவறு என எடுத்துக்கூறுவேன்” என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன் தங்கள் வீடு பச்சை மண்டலத்தில் தான் உள்ளது எனவும், தனது மகன் மட்டுமல்ல அங்கே யாரும் முகக்கவசம் அணியவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும் தனது மகன் உட்பட அனைவரையும் தங்கள் அரசு முகக்கவசம் அணிய அறிவுறுத்தியிருப்பதாகவும் குறிப்பிடுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வருவதாக கர்நாடக போலீஸார் தெரிவித்துள்ளனர்.