இந்தியா

"போலீஸ் நடவடிக்கை எடுத்திருந்தால் அனீஷ் கொல்லப்பட வாய்ப்பில்லை!"- கேரளாவில் ஆணவக் கொலை?!

webteam

கேரள மாநிலம் பாலக்காடு அருகே சமீபத்தில் காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞர் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆணவக் கொலையாக இருக்கலாம் என்கிற கோணத்தில் போலீஸ் விசாரணை நடத்தி வருகிறது.

பாலக்காடு அருகே உள்ள தேன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அனீஷ் (வயது 27). பெயின்டர் வேலை பார்க்கும் இவரும், இதேபகுதியைச் சேர்ந்த வேறொரு சமூகத்தைச் சேர்ந்த ஹரிதா என்பவரும் பல வருடங்களாக காதலித்து வந்துள்ளனர். ஹரிதா வசதி படைத்த குடும்பத்தில் இருந்து வந்தவர்; அனீஷின் தந்தையோ கூலி வேலை பார்த்து வருவதால் அவர்களின் குடும்பம் ஏழ்மையில் இருந்துள்ளது. இதனால், இவர்களின் காதலுக்கு ஆரம்பத்தில் இருந்தே ஹரிதாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்ததாக கூறப்படுகிறது. எதிர்ப்புக்கு மத்தியில் மூன்று மாதங்களுக்கு முன்பு ஹரிதவும், அனீஷும் திருமணம் செய்து கொண்டுள்ளனர். திருமணத்துக்கு பின் இருவரும் அனீஷின் குடும்பத்தில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர்.

இதற்கிடையே, திருமணத்துக்கு பிறகு ஹரிதாவின் தந்தை பிரபு குமார் தரப்பில் இருந்து இருவருக்கும் தொடர்ந்து மிரட்டல் வந்ததாக கூறப்படுகிறது. `இருவரையும் ஒன்றாக வாழ விடமாட்டோம்' என சமீபத்தில் பிரபு குமார், அனீஷின் வீட்டில் சென்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக அனீஷின் தந்தை ஆறுமுகம் போலீஸில் புகாரும் கொடுத்துள்ளார்.

இதற்கிடையே, நேற்று இரவு வெளியில் சென்றிருந்த அனீஷ் பைக்கில் வீடு திரும்பி கொண்டிருக்கும்போது, அவரை சிலர் தாக்கி கொடூரமாக வெட்டிக் கொலை செய்தனர்.

அனீஷுடன் பைக்கில் வந்த அருண் என்பவர், ஹரிதாவின் தந்தை பிரபு குமார் மற்றும் அவரது மாமா சுரேஷ் ஆகியோர் அனீஷை கத்தி மற்றும் இரும்பு வைத்து வெட்டி கொலை செய்ததாக சாட்சியம் அளித்துள்ளார். இந்த சாட்சியத்தின் அடிப்படையில் சுரேஷ், பிரபு குமார் ஆகியோர் நேற்று இரவே கைது செய்யப்பட்டனர்.

குஜல்மன்னம் காவல் நிலையத்தில் 302 (கொலை) மற்றும் 34 (பல நபர்கள் செய்த குற்றச் செயல்) பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை (எஃப்.ஐ.ஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.

குஜல்மன்னம் காவல் நிலையத்தைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறும்போது, ``மணமகளின் தந்தை மற்றும் மாமா ஆகியோர் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படுகிறது. ஆணவக் கொலை ரீதியில் இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என்கிற ரீதியில் விசாரணை நடந்து வருகிறது. விரிவான விசாரணைகளுக்குப் பிறகுதான், இது ஆணவக் கொலையா என்பதை நாங்கள் உறுதிப்படுத்த முடியும்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்தச் சம்பவம் குறித்து பேசியுள்ள அனீஷின் மனைவி ஹரிதா, ``ஏழ்மையும் சாதியையும் காரணம் காட்டி எங்கள் காதலை என் வீட்டினர் ஏற்கவில்லை. எனினும் என்னை பெண் கேட்டு அனீஷ் என் வீட்டுக்கு வந்தார். இதன்பின் அனீஷிடம் என் குடும்பத்தினர் அடிக்கடி சண்டையிட்டு வந்தனர். நாங்கள் திருமணம் முடித்த பிறகு ஒருமுறை என்னுடைய மாமா சுரேஷ் வீட்டுக்கு வந்து எங்களை மிரட்டி விட்டு என்னுடைய போனையும் பிடுங்கிச் சென்றார். இதை போலீஸில் புகாராக கொடுத்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. நடவடிக்கை எடுத்திருந்தால் இந்நேரம் அனீஷ் என்னைவிட்டு சென்றிருக்க மாட்டார்" என்று கண்ணீர் விட்டு கதறி அழுதுள்ளார்.

கேரளத்தில் சமீப ஆண்டுகளில் ஆணவக் கொலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. 2018 ஆம் ஆண்டில் கோட்டையம் பகுதியைச் சேர்ந்த கெவின் பி ஜோசப் என்ற தலித் கிறிஸ்தவ இளைஞர், அவரது மனைவி நீனுவின் குடும்பத்தினரால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டார். இந்த தம்பதிகள் காதலித்து கரம்பிடித்த மூன்றாம் நாளே இந்தக் கொலை சம்பவம் நடந்தது. தமிழகத்தின் உடுமலை சங்கர் கொலை சம்பவத்தைப்போல கேரளாவில் இந்தக் கொலை சம்பவம் அப்போதே பரபரப்பாகப் பேசப்பட்டது. இந்த நிலையில் தற்போதும் அதுபோல் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.