இந்தியா

வீடில்லாத 10 வயது சிறுவனும், டேனி என்ற நாயும்... சிறுவனுக்காக பிரார்த்திக்கும் இதயங்கள்!

webteam

உத்தரப்பிரதேச மாநிலம் முஷபர்நகர் பகுதியில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி பலரையும் உருகச் செய்துள்ளது.

பூட்டிய கடைக்கு எதிரே தன்னுடைய செல்ல நாயுடன் சிறுவன் தூங்கும் புகைப்படம்தான் அந்த வைரல் போட்டோ. அங்கிட் என்ற அந்த சிறுவனுக்கு 9-10 வயதுதான் இருக்கும். அந்த சிறுவனுக்கு எதுவுமே நினைவில் இல்லை. இதற்கு முன்பு வசித்தது எங்கே? உடன் இருந்தது யார்? எந்த தகவலும் நினைவில் இல்லை என்று சொல்லப்படுகிறது. அந்த சிறுவனுக்கு தெரிந்தது எல்லாம், தன்னுடைய பெயர். நாயின் பெயர், தந்தை சிறையில் உள்ளார். தாய்தான் தன்னை தத்தெடுத்தார் என்பது மட்டுமே.

(மாதிரிப்படம்)

பலூன் விற்பது, டீ கடையில் வேலை என கடந்த சில வருடங்களாக சின்ன சின்ன வேலைகள் செய்து ஒரு நாடோடி வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் சிறுவன் அங்கிட். அவருக்கு துணையாக அவருடனே இருக்கிறது அவரது செல்ல நாய் டேனி. தான் சம்பாதிக்கும் பணத்தை தனக்கும் தன் நாய்க்கும் உணவுக்காக செலவிட்டு கொள்கிறார் அங்கிட்.சில நாட்களுக்கு முன்பு பூட்டிய கடைக்கு எதிரே தன்னுடைய நாயுடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுவனை யாரோ ஒருவர் படம் பிடித்து சமூக வலைதளத்தில் பதிவிட, அது தற்போது வைரலாகியுள்ளது. செய்தி வைரலானதை அடுத்து முஷபர்நகர் போலீசார் சிறுவனை பல இடங்களில் தேடி கண்டுபிடித்துள்ளனர்.

சிறுவன் அங்கிட் குறித்து பேசிய டீ கடை உரிமையாளர், அங்கிட் மிகவும் மரியாதையான ஆள். சுயமரியாதைக்காரர் கூட. அவர் இலவசமாக எதையுமே பெறமாட்டார். தன்னுடைய நாய்க்கு கூட அவர் இலவசமாக பால் வாங்கிக்கொள்ள மாட்டார். அந்த நாய் அவரை விட்டு பிரியவே பிரியாது. அங்கிட் வேலைபார்த்து முடிக்கும்வரை நாய் டேனி மூலையிலேயே சமத்தாக அமர்ந்திருக்கும் என தெரிவித்துள்ளார்

(சிறுவன் அங்கிட்டும், நாய் டேனியும்)

அங்கிட் தற்போது காவல்துறை பாதுகாப்பில் உள்ளார். அங்கிட் எங்கிருந்து வந்தார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். அங்கிட்டின் புகைப்படத்தை பல காவல்நிலையங்களுக்கும் அனுப்பி விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். அங்கிட்டின் பழைய கதை தெரியும் வரை அவர் அருகில் உள்ள பள்ளியில் படிக்கவுள்ளார். போலீசாரின் வேண்டுகோளை ஏற்றுள்ள பள்ளி ஒன்று அங்கிட்டுக்கு இலவச கல்வி கொடுக்க முன்வந்துள்ளது.