இந்தியா

டெல்லி தப்லிக் மாநாட்டில் பங்கேற்ற வெளிநாட்டினருக்கு 10 ஆண்டுகள் தடை..?

webteam

டெல்லி தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்துகொண்ட வெளிநாட்டினருக்கு இந்தியாவில் நுழைய 10 ஆண்டுகள் தடை விதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.

கொரோனா வைரஸ் அதிகம் பரவியதால் டெல்லியில் உள்ள நிஜாமுதீன் கட்டடத்தில் நடந்த தப்லிக் ஜமாத் மாநாட்டில் கலந்து கொண்டவர்களின் பட்டியலை போலீசார் பரிசோதித்தனர். அப்போது மாநாட்டில் பங்கேற்ற 2200 பேர் சுற்றுலா விசாவில் இந்தியா வந்த பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் தெரியவந்தது. அத்துடன் அவர்கள் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்குப் பயணம் செய்ததும், அனுமதி இன்றி மத நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டதும் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுதொடர்பாக அவர்களில் பல பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்காக பல்வேறு மையங்களில் அனுமதிக்கப்பட்டனர். அனைத்து விவரங்களும் பதிவு செய்யப்பட்ட பிறகு அவர்கள் படிப்படியாக தங்களுடைய சொந்த நாடுகளுக்குச் செல்ல அனுமதி அளிக்கப்பட்டது.

இந்நிலையில் சுற்றுலா விசாவை தவறாகப் பயன்படுத்தியது மற்றும் அனுமதி அளிக்கப்படாத நடவடிக்கைகளில் கலந்துகொண்டது ஆகிய காரணங்களால், இனி அந்த 2200 பேரும் இந்தியாவில் நுழைய 10 ஆண்டுகள் தடைவிதிக்குமாறு மத்திய உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இந்தப் பரிந்துரையை பல்வேறு துறைகளுடன் ஆலோசித்த பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சகம் இறுதி முடிவெடுக்கும் எனப்படுகிறது.