இந்தியா

பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அமைச்சர் அமித் ஷா ஆலோசனை

webteam

அயோத்தி நில வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாக இருப்பதை அடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தனது வீட்டில் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.

அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் யாருக்கு சொந்தம் என்ற வழக்கை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்தது. சமரசக் குழுவின் முயற்சி தோல்வி அடைந்த நிலையில், 40 நாட்கள் தொடர்ந்து விசாரணை நடைபெற்றது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் தேதி அறிவிக்காமல் தீர்ப்பை ஒத்திவைத்திருந்தனர். 

இதனையடுத்து, இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படுகிறது. அரசியல் சாசன அமர்வில் இடம்பெற்றுள்ள தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, அசோக் பூஷண், டி.ஒய்.சந்திரசூட், எஸ்.அப்துல் நஸீர் ஆகியோர் தீர்ப்பு வழங்கவுள்ளனர். நாடே எதிர்பார்க்கும் அயோத்தி வழக்கில் தீர்ப்பு வெளியாவதையொட்டி அனைத்து மாநிலங்களிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. 

இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, நாட்டின் பாதுகாப்பு குறித்து தனது இல்லத்தில் ஆலோசனை நடத்தி வருகிறார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், புலனாய்வு துறை தலைவர் அரவிந்த் குமார் மற்றும் மூத்த அதிகாரிகள் இந்த ஆலோசனையில் இடம்பெற்றுள்ளனர்.