இந்தியா

காஷ்மீர் என்கவுன்ட்டர் - ஹிஸ்புல் முஜாகிதீன் கமாண்டர் சுட்டுக் கொலை

ஜா. ஜாக்சன் சிங்

ஜம்மு - காஷ்மீரில் இன்று நடந்த என்கவுன்ட்டரில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் கமாண்டர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சி அமைந்தது முதலாக காஷ்மீரில் உள்ள பயங்கரவாத இயக்கங்கள் மீண்டும் புத்துணர்ச்சி பெற்று செயல்பட்டு வருவதாக பாதுகாப்புத் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, பாகிஸ்தானில் இருந்து இந்த இயக்கங்களுக்கு நிதி மற்றும் ஆயுத உதவிகள் வழங்கப்படுவதும் சமீபகாலமாக அதிகரித்துள்ளது. இதையடுத்து, காஷ்மீர் முழுவதும் தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை காவல்துறையினரும், ராணுவத்தினரும் முழுவீச்சில் தொடங்கியுள்ளனர்.

அந்த வகையில், ஜம்மு - காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள கவாஸ் பகுதியில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக போலீஸாருக்கு இன்று காலை தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீஸார், ராணுவ வீரர்கள், துணை ராணுவப் படையினர் அடங்கிய பாதுகாப்புப் படையினர் அப்பகுதிக்கு சென்று தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கிருந்த ஒரு கட்டடத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தீவிரவாதிகளை சரணடையுமாறு பாதுகாப்புப் படையினர் அறிவுறுத்தினர்.

ஆனால், இதனை ஏற்காத தீவிரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினரும் பதில் தாக்குதலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் ஒரு தீவிரவாதி சுட்டுக் கொல்லப்பட்டார். விசாரணையில், அவரது பெயர் நிசார் கண்டே (32) என்பது தெரியவந்தது. தப்பியோடிய மற்ற தீவிரவாதிகளை பாதுகாப்புப் படையினர் தேடி வருகின்றனர்.