கர்நாடகாவில் 18-25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்ட அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் கட்டாய சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. மாணவர்களின் விருப்பம், சுய ஒப்புதல், ரகசிய தன்மை பாதுகாப்புடன் பரிசோதனை, ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் 18 முதல் 25 வயதுக்குட்பட்ட 7,000-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்களுக்கு எச்.ஐ.வி தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இதன் காரணமாக, மாநிலம் முழுவதும் உள்ள பொறியியல் மற்றும் கலை-அறிவியல் கல்லூரிகளில் எச்.ஐ.வி பரிசோதனை மற்றும் ஆலோசனைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம்களை நடத்துமாறு கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் பரிந்துரையின் பேரில், விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி கல்வித்துறை இணைந்து அரசு, உதவிபெறும் மற்றும் தனியார் கல்லூரிகளில் இம்முகாம்களை அமைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றன. கல்லூரிகளில் முகாம்கள் அமைப்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தாலும், மாணவர்களின் விருப்பம் மற்றும் சுய ஒப்புதலின் அடிப்படையிலேயே பரிசோதனைகள் செய்யப்படும்.
இந்தியாவில் எச்.ஐ.வி பாதிப்பில் கர்நாடகா 3-வது இடத்தில் உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 2.60 லட்சம் பேர் எச்.ஐ.வி-யால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சுமார் 54,000 பேருக்கு தங்களுக்குத் தொற்று இருப்பது கூடத் தெரியாமல் வாழ்ந்து வருகின்றனர்.18 முதல் 35 வயதுடைய இளைஞர்களிடையே பாதிப்பு எண்ணிக்கை 2023-24இல் 44,500-லிருந்து, 2025-26இல் 66,600 ஆகக் கடுமையாக உயர்ந்துள்ளது. மாணவர்களின் சுய விவரங்கள் மற்றும் ரகசிய தன்மையைப் பாதுகாக்கும் வகையில், எச்.ஐ.வி தொற்றுக் குறித்த ஆபத்தை சுயமாக மதிப்பிட்டுக் கொள்ள 'QR கோட்' வசதியையும் KSAPS அறிமுகப்படுத்தியுள்ளது.
எச்.ஐ.வி தொற்றைக் கட்டுப்படுத்தவும், பாதிப்பு உள்ளவர்களை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்கவும் மத்திய அரசின் '95-95-99' இலக்கின் கீழ் இந்நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.