ncert 7th class book x page
இந்தியா

7ஆம் வகுப்பு NCERT பாடப்புத்தகம்.. முகலாயர்கள், டெல்லி சுல்தான்கள் வரலாறு நீக்கம்!

மத்திய அரசின் NCERT, 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் வரலாறு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது.

Prakash J

இந்தி மொழி திணிப்புக்காக, பாஜக ஆளாத மாநில அரசுகள் மத்திய அரசை எதிர்த்து வருகின்றன. குறிப்பாக, தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட அரசுகள் மொழிப் பிரச்னைக்காக மத்திய அரசைக் கடுமையாக எதிர்த்து வருகிறது. தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) அடிக்கடி பாடத் திட்டம் நீக்கம் சம்பந்தமாகச் சர்ச்சையில் சிக்கி உள்ளது. NCERT பாடத்திட்டத்தின்கீழ் தமிழ்நாடு உட்பட நாடு முழுவதும் பல்வேறு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், மத்திய அரசின் NCERT, 7ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்திலிருந்து முகலாயர்கள் மற்றும் டெல்லி சுல்தான்களின் வரலாறு முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளது. அவற்றிற்குப் பதிலாக, மகதம், மௌரியர்கள், சாதவாகனர்கள் மற்றும் சுங்கர்கள் போன்ற பண்டைய இந்திய வம்சங்களைப் பற்றிய புதிய அத்தியாயங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

ncert books

இந்தப் புதிய புத்தகங்கள் தேசிய கல்விக் கொள்கை (NEP)-2020 மற்றும் தேசிய பாடத்திட்ட கட்டமைப்பு (NCF)-2023 ஆகியவற்றின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டுள்ளன. 'எக்ஸ்ப்ளோரிங் சொசைட்டி: இந்தியா அண்ட் பியாண்ட், பாகம்-1' என்ற தலைப்பிலான புதிய சமூக அறிவியல் புத்தகம், உத்தரப்பிரதேசத்தின் பிரயாக்ராஜில் சமீபத்தில் நடந்த மகா கும்பமேளா மற்றும் மேக் இன் இந்தியா மற்றும் பேட்டி பச்சாவ்-பேட்டி பதாவோ போன்ற மத்திய அரசின் திட்டங்கள் பற்றிய குறிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. 'பூமி எவ்வாறு புனிதமாகிறது' என்ற அத்தியாயம், இந்தியாவிலும் வெளிநாட்டிலும் உள்ள அனைத்து மதங்களாலும் புனிதமாகக் கருதப்படும் இடங்கள் மற்றும் புனித யாத்திரைகள் குறித்த குறிப்புக்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 12 ஜோதிர்லிங்கங்கள், சார்தாம் யாத்திரை மற்றும் சக்திபீடங்கள் உள்ளிட்ட புனிதமான புவியியல் இடங்களின் விவரங்கள் அடங்கும். இதேபோல், ஜனபதா, சாம்ராஜ், ஆதிராஜா, ராஜாதிராஜா போன்ற சமஸ்கிருத வார்த்தைகள் பல்வேறு அத்தியாயங்களில் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், NCERT-யின் சமீபத்திய வழிகாட்டுதல்களின்படி, வரவிருக்கும் கல்வியாண்டிற்கு பெற்றோர்களும் மாணவர்களும் சமீபத்தில் வெளியிடப்பட்ட பாடப்புத்தகங்களை மட்டுமே பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என அது தெரிவித்துள்ளது.