இந்தியா

விண்வெளி துறையில் தனியாரை ஊக்குவிக்கும் சீர்திருத்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

jagadeesh

இந்திய விண்வெளி துறையை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்து செல்வதற்கான சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை குழு கூட்டம் இன்று நடைபெற்றது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பொது முடக்கம் தொடர்பாக கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் நாட்டின் வளர்ச்சி அடுத்தக்கட்ட திட்டங்கள் குறித்தும் கலந்தாலோசிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் இந்திய விண்வெளி துறையின் அடுத்தக் கட்ட நகர்வுகள், செயல்பாடுகள் மற்றும் சீர்திருத்த நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஒப்புதல் மூலம் புதிதாக உருவாக்கப்பட்ட இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு மற்றும் அங்கீகார மையம் (IN-SPACe) தனியார் நிறுவனங்களுக்கு இந்திய விண்வெளி உள்கட்டமைப்பைப் பயன்படுத்த வாய்ப்பு வழங்கப்படும். இது விண்வெளி நடவடிக்கைகளில் தனியார் தொழில்களைக் கையாளுதல், ஊக்குவித்தல் மற்றும் வழிகாட்டும் விதமாக அமையும்.

பொதுத்துறை நிறுவனமான ‘நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட் (என்.எஸ்.ஐ.எல்)’ விண்வெளி நடவடிக்கைகளை மேற்கொள்ளும். மேலும் இந்திய விண்வெளி துறைக்கான தேவைகளை பூர்த்திச் செய்யும். இந்த சீர்திருத்தங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள், புதிய தொழில்நுட்பங்கள், ஆய்வுப் பணிகள் மற்றும் மனித விண்வெளிப் பயணம் திட்டம் ஆகியவற்றில் இஸ்ரோ அதிக கவனம் செலுத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.