இந்தியா

'சந்திரபாபு நாயுடு நாடகம் எல்லோருக்கும் தெரியும்' - ஜெகன் மோகன் ரெட்டி விமர்சனம்

JustinDurai
'சந்திரபாபு நாயுடு எல்லாவற்றிலுமிருந்து அரசியல் லாபத்தை மட்டுமே பெற முயல்கிறார்' என விமர்சித்துள்ளார் ஆந்திரா முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
ஆந்திரா சட்டமன்றத்தில் தன்னையும், தனது மனைவியையும் அவதூறு செய்துவிட்டதாக கூறி இனி முதலமைச்சராக மட்டுமே சட்டமன்றத்தில் அடி எடுத்து வைப்பேன் என சபதம் செய்துவிட்டு சந்திரபாபு நாயுடு சட்டமன்றத்தை விட்டு வெளியேறினார். பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில் அவர் கண்கலங்கினார். சந்திரபாபு நாயுடு மனம் உடைந்து அழுதது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இவ்விவகாரம் குறித்துப் பேசிய ஆந்திரா முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி, "சந்திரபாபு நாயுடு விரக்தியில் இருக்கிறார். அவர் தனது சொந்த தொகுதிக்கு உட்பட்ட குப்பம் முனிசிபல் கார்ப்பரேஷன் தேர்தலை இழந்தார். இதனால் அவர் கடுமையான விரக்தியில் உள்ளார். இது அனைவருக்குமே தெரியும். அதனால் அவர் என்ன பேசுகிறோம். என்ன செய்கிறோம் எனத் தெரியாமல் இருக்கிறார்.
இதற்கு முன்னர் சட்டப்பேரவையில் பலமுறை தேவையற்ற சர்ச்சைகளை சந்திரபாபு நாயுடு எழுப்பியுள்ளார். இப்போது அவரை மக்கள் தூக்கி எறிந்ததால் இப்படி நடந்து கொள்கிறார். சந்திரபாபு எல்லாவற்றிலுமிருந்து அரசியல் லாபத்தை மட்டுமே பெற முயல்கிறார். இது மிகவும் துரதிர்ஷ்டவசமானது. அப்போது நான் சபைக்குள் இல்லாவிட்டாலும் அவரது நாடகம் எல்லா கண்களுக்கும் தெரியும்" என்றார்.