வினோத் குமார் சுக்லா எக்ஸ் தளம்
இந்தியா

ஞானபீட விருது | இந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா தேர்வு!

59வது ஞானபீட விருதுக்கு இந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Prakash J

இலக்கியத் துறையில் சாதனை படைத்தோருக்கு ஆண்டுதோறும் ஞானபீட விருது வழங்கப்பட்டு வருகிறது. நாட்டின் மிக உயர்ந்த இலக்கிய விருதாக ஞானபீடம் விருது கருதப்படுகிறது. கடந்த 1961-இல் நிறுவப்பட்ட ஞானபீட விருது, முதன்முதலில் மலையாளக் கவிஞர் ஜி. சங்கர குருப்பிற்கு 1965-இல் 'ஓடக்குழல்' என்ற கவிதைத் தொகுப்பிற்காக வழங்கப்பட்டது.

அந்த வகையில், சத்தீஸ்கரைச் சேர்ந்த இந்தி எழுத்தாளர் வினோத் குமார் சுக்லா, 59வது ஞானபீட விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்தி இலக்கியம், படைப்பாற்றல் மற்றும் தனித்துவமான எழுத்து பாணிக்கு அவர் அளித்த சிறந்த பங்களிப்புக்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுடன் ரூ.11 லட்சம் ரொக்கப் பரிசு, சரஸ்வதியின் வெண்கலச் சிலை மற்றும் ஒரு பாராட்டுப் பத்திரம் ஆகியவை வழங்கப்படுகிறது.

வினோத் குமார் சுக்லா

முன்னதாக, இந்தாண்டுக்கு விருது பெறுபவரை தேர்வு செய்வதற்கான கூட்டம் புகழ்பெற்ற கதைசொல்லியும் ஞானபீட விருது பெற்றவருமான பிரதிபா ரே தலைமையில் நடைபெற்றது. இதில் வினோத் குமார் (88) தேர்வு செய்யப்பட்டார். சத்தீஸ்கர் மாநிலத்திலிருந்து இந்த விருதைப் பெறும் முதல் எழுத்தாளர் வினோத் குமாரே ஆவார். இவர் சிறுகதை எழுத்தாளர், கவிஞர் மற்றும் கட்டுரையாளர், இந்தி மொழியின் சிறந்த சமகால எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார்.

இந்த விருதைப் பெறும் 12வது இந்தி எழுத்தாளர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது படைப்புகள் பெரும்பாலும் மனித உணர்வுகள், உறவுகள் மற்றும் அன்றாட வாழ்க்கையின் எளிமை ஆகியவற்றை ஆராய்கின்றன. இவர், 1999ஆம் ஆண்டு தனது ’தீவர் மே ஏக் கிர்கீ ரஹதி தி’ என்ற நூலுக்காக சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். சுக்லாவின் மற்ற குறிப்பிடத்தக்க படைப்புகளில், ‘நௌகர் கி கமீஸ்’ (1979), ’மணி கவுல்’ திரைப்படமாகத் தழுவி எடுக்கப்பட்ட நாவல் மற்றும் ’சப் குச் ஹோனா பச்சா ரஹேகா’ (1992) என்ற கவிதைத் தொகுப்பு ஆகியவை அடங்கும்.