அஸ்வின், அண்ணாமலை எக்ஸ் தளம்
இந்தியா

இந்தி மொழி விவகாரம்| “அஸ்வின் சொன்னது சரிதான்” - அண்ணாமலை பதில்!

இந்தி மொழி விவகாரம் குறித்த கருத்துக்கு, “அஸ்வின் சொன்னது சரிதான்” என மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பதில் அளித்துள்ளார்.

Prakash J

தமிழ்நாட்டில் இந்தி திணிப்பு ஒரு முக்கியமான விஷயமாக இருந்து வருகிறது. இதற்காக, பல ஆண்டுகளாக மாநிலத்தில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்தி பேசாத மாநிலங்களில், முதன்மையாக தெற்கில் இந்தி மொழியை திணிக்க தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசு முயற்சிப்பதாக எதிர்க்கட்சிகள் பலமுறை குற்றம்சாட்டி வருகின்றன. கடந்த ஆண்டு டிடி தமிழ் அலுவலகத்தில் நடந்த இந்தி மாத விழாவில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டதை அடுத்து தமிழகத்தில் பெரும் மொழி சர்ச்சை வெடித்தது. இதற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி மாத விழாவை எச்சரிக்கையுடன் கொண்டாட வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியிருந்தார்.

அஸ்வின்

அந்த வகையில் தற்போது மீண்டும் இந்தி திணிப்பு விவகாரம் விஸ்வரூபமெடுத்துள்ளது. நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின், அங்கிருந்த மாணவர்களிடையே உரையைத் தொடங்கும் முன் ”இந்தியில் பேசவா, ஆங்கிலத்திலா, தமிழா” எனக் கேட்டார். அதற்கு அவர்கள், “தமிழ்” எனக் கூறினர். இதையடுத்து உரையைத் தொடங்கிய அஸ்வின், “இந்தி தேசிய மொழி அல்ல, அலுவல் மொழிதான்” என்றார். இந்த விவகாரம் மீண்டும் விஸ்வரூபமெடுத்துள்ளது.

இதுகுறித்த திமுகவைச் சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன், “பல மாநிலங்கள் பல்வேறு மொழிகளை பேசும்போது, ​​இந்தி எப்படி தேசிய மொழியாகும்” எனக் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த தமிழக பாஜக கவுன்சிலர் உமா ஆனந்தன், ”திமுக இதைப் பாராட்டுவதில் ஆச்சரியமில்லை. அவர் தேசிய கிரிக்கெட் வீரரா அல்லது தமிழக வீரரா என்பதை நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன்" எனக் கேள்வி எழுப்பியிருந்தார்.

annamalai

இதுதொடர்பாக மாநில பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், “அஸ்வின் கூறியது சரிதான். நானும் அதையே சொல்கிறேன். இந்தி தேசிய மொழி அல்ல, அது ஒரு இணைப்பு மொழி, அது ஒரு வசதிக்கான மொழி. நான் எங்கும் இந்தி தேசிய மொழி என்று சொல்லவில்லை. வேறு யாரும் அவ்வாறு சொல்லவும் இல்லை” எனத் தெரிவித்துள்ளார்.