இந்தியா

அசாம் மாநில புதிய முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்பு!

sharpana

அசாம் மாநில முதலமைச்சராக ஹிமந்தா பிஸ்வா சர்மா பதவியேற்றுக்கொண்டார்.

 அசாமில் சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 126 இடங்களில் பாரதிய ஜனதா கட்சி 60 இடங்களிலும் அதன் கூட்டணிக்கட்சிகள் 15 இடங்களிலும் வெற்றி பெற்றன. இதையடுத்து ஆட்சியை பாஜக தக்க வைத்தது. ஏற்கெனவே, முதல்வராக இருந்த சர்பானந்த சோனாவால், வடகிழக்கு ஜனநாயகக் கூட்டணியை உருவாக்கி பா.ஜ.க.வின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றிய ஹிமந்தா பிஸ்வா சர்மா இருவருக்கும் முதல்வர் பதவியை பிடிப்பதில் போட்டி ஏற்பட்டது. இந்த போட்டியால் இருவரும் நேற்று முன்தினம் டெல்லி சென்று பா.ஜ.க. தலைவர் ஜே.பி. நட்டா, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்துப் பேசினர். இதில் சுமூக முடிவு ஏற்பட்டதையடுத்து, கவுஹாத்தியில் நேற்று நடந்த பா.ஜ.க. எம்எல்ஏ.க்கள் கூட்டத்தில் முதல்வர் பதவிக்கு ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்வு செய்யப்பட்டார். முதல்வர் பதவியில் இருந்து ராஜினாமா செய்த சர்பானந்த சோனாவால் தனது ராஜினாமா கடிதத்தை ஆளுநருக்கு அனுப்பி வைத்தார். இதனைத்தொடர்ந்து, அசாம் மாநில புதிய முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று பதவியேற்றுக் கொண்டார். ஆளுநர் ஜெகதீஷ் முகி அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்பு விழாவில் பா.ஜ.க. தலைவர் ஜே.பி.நட்டா, பொதுச்செயலாளர் சந்தோஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக ஹிமந்தா பிஸ்வா சர்மா இன்று காமக்யா தேவி கோயில் உள்ளிட்ட முக்கிய கோயில்களுக்குச்சென்று வழிபட்டார். அசாம் மாநிலத்தின் புதிய முதல்வருக்கு பிரதமர் நரேந்திர மோடி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.