மகாராஷ்டிர முன்னாள் கூடுதல் காவல் ஆணையர் ஹிமான்ஷு ராய் நேற்று துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். மும்பையில் ஏடிஜிபி ராய் என்றாலே பல ரவுடிகளுக்கு தொடை நடுங்க ஆரம்பித்துவிடும். ராய்க்கு ‘பாம்பே பாய்’ என்ற இன்னொரு பெயரும் இருக்கிறது. இவர் மும்பையில் அட்டூழியம் செய்த பல ரவுடிகளை அடங்கச் செய்தவர். முடிக்க முடியாத பல சிக்கலான வழக்குகள் இறுதியாக ராயிடம்தான் வரும். அப்படி வந்தால் அந்த வழக்குகள் முடியப்போகிறது என்று அர்த்தமாம். ராய் அதிகாரியாக இருந்த காலகட்டத்தில் செய்த சாதனைகளை பட்டியலிட முடியாது எனக் கூறுகின்றனர் அவருடன் பணிபுரிந்த சக அதிகாரிகள்.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக புற்றுநோய் பாதிப்பால் கடும் மன உளைச்சலில் இருந்த ஹிமான்ஷூ ராய் தற்கொலை முடிவை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. இவரின் உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்திய கோகுல் தேஜ்பல் மருத்துவமனையின் டாக்டர் விகாஸ் மைன்தாத் கூறியது "துப்பாகியில் இருந்து வெளியேறிய குண்டு மண்டை ஓட்டை துளைத்துக்கொண்டு மூளையை தாக்கியுள்ளது. இதனால் ஹிமான்ஷூ ராய்க்கு அதிகப்படியான
ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது, இதனால் அவரின் உயிர் உடனடியாக பிரிந்துள்ளது. அவரின் பிரேத பரிசோதனை முழுவதும் வீடியோ பதிவாக எடுக்கப்பட்டுள்ளது" என்றார் அவர்.