இமயமலை எக்ஸ் தளம்
இந்தியா

இமயமலையில் 'பனி வறட்சி'.. ஆறுகளில் நீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்.. அதிர்ச்சித் தகவல்!

காஷ்மீர், மணாலி மற்றும் சிம்லா போன்ற பகுதிகளில் ஜனவரி 22க்குப் பிறகே முதல் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது வழக்கமான காலத்தைவிட மிகவும் தாமதமானது.

திவ்யா தங்கராஜ்

இமயமலைப் பகுதிகளில் இந்த ஆண்டு நிலவும் மிகக் குறைந்த பனிப்பொழிவு, வட இந்தியா முழுவதும் நீர் நெருக்கடியை உருவாக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.

இமயமலைப் பகுதிகளில் இந்த ஆண்டு நிலவும் மிகக் குறைந்த பனிப்பொழிவு, வட இந்தியா முழுவதும் நீர் நெருக்கடியை உருவாக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். வழக்கமாகப் பல அடி ஆழத்திற்குப் பனி போர்த்தியிருக்க வேண்டிய சிகரங்கள், இந்த ஆண்டு ஜனவரி இறுதி வரை வறண்டு காணப்பட்டது 'பனி வறட்சி' என அழைக்கப்படுகிறது. காஷ்மீர், மணாலி மற்றும் சிம்லா போன்ற பகுதிகளில் ஜனவரி 22க்குப் பிறகே முதல் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. இது வழக்கமான காலத்தைவிட மிகவும் தாமதமானது.

இமயமலை

உத்தரகாண்ட் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் உயர் மலைப்பகுதிகளில் இந்த சீசனில் 80 முதல் 100 சதவீதம் வரை பனிப்பொழிவு பற்றாக்குறை நிலவுகிறது. கங்கோத்ரி மற்றும் சோராபரி போன்ற பனிப்பாறைகள் இந்தியாவின் 'தண்ணீர் வங்கி' போன்றது. குளிர்காலப் பனிப்பொழிவுதான் கோடையில் உருகும் பனிப்பாறைகளை மீண்டும் நிரப்புகிறது. ஆனால் இப்போது பெய்யும் 'ஈரமான பனி' விரைவாக உருகிவிடும். இது பனிப்பாறைகளை வலுப்படுத்தாது.

மத்திய தரைக் கடலில் இருந்து வரும் ஈரப்பதம் கொண்ட காற்றுதான் பனிப்பொழிவுக்குக் காரணம். உலக வெப்பமயமாதல் காரணமாக இந்தக் காற்றின் போக்கு மாறிவிட்டது அல்லது வலிமை குறைந்துவிட்டது. புவி வெப்பமடைவதால், பனியாக விழ வேண்டிய ஈரப்பதம் மழையாக விழுந்துவிடுகிறது. கங்கை, சிந்து மற்றும் யமுனை ஆறுகளின் நீர் ஓட்டத்தில் 25 சதவீதம் இமயமலைப் பனி உருகுவதன் மூலமே கிடைக்கிறது. 

இமயமலை

பனிப்பொழிவு குறைந்தால், வசந்த காலத்தில் ஆற்று நீர் வரத்து முற்றிலும் சீரற்றதாக மாறும். ரஃபி பருவ சாகுபடிக்குத் தேவையான நீர் கிடைக்காமல் போவதோடு, காஷ்மீர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தின் ஆப்பிள் விளைச்சலும் கடுமையாகப் பாதிக்கப்படும். நீர்மின் நிலையங்களின் உற்பத்தி குறைவதோடு, குல்மார்க் மற்றும் அவுலி போன்ற சுற்றுலாத் தலங்களின் பொருளாதாரமும் வீழ்ச்சியடையும். மக்களின் வாழ்வாதாரமாக விளங்கும் இமயமலை ஆறுகளின் இந்த மாற்றம், எதிர்காலத்தில் பெரும் சுற்றுச்சூழல் அழுத்தத்தை ஏற்படுத்தும் என ஆய்வுகள் எச்சரிக்கின்றன.