இந்தியா

மூன்று நாட்களுக்கு பிறகு குறைந்தது ஹிமாச்சல பிரதேச பனிப்பொழிவு

மூன்று நாட்களுக்கு பிறகு குறைந்தது ஹிமாச்சல பிரதேச பனிப்பொழிவு

webteam

ஹிமாச்சல பிரதேசத்தில்  தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பிறகு, பனிப்பொழிவு சற்று குறைந்துள்ளதாக வானிலை ஆய்வு மைய அதிகாரி தெரிவித்துள்ளார். 

'தேவபூமி' என்றும் சிறப்பித்து போற்றப்படும் ஹிமாச்சல பிரதேசம் பசுமையான பள்ளத்தாக்குகள், கிறங்கடிக்கும் வெண்பனிச் சிகரங்கள், மனம் மயக்கும் ஏரிகள், பசும் புல் நிலங்கள் என சுற்றுலாப் பயணிகளின் சொர்கமாக காட்சியளித்து வருகிறது.

இந்தியாவின் வடமாநிலமான ஹிமாச்சல பிரதேசம் உலகம் முழுவதிலுமிருந்து லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகளை ஈர்த்துக் கொண்டிருக்கிறது.

ஆண்டுதோறும் வசந்த காலம், மழைக் காலம், பனிக் காலம் ஆகிய மூன்று பருவங்கள் காணப்படுகின்றன. இதில் வசந்த காலம் பிப்ரவரி மாதத்தின் மத்தியில் ஆரம்பித்து ஏப்ரல் மத்தியில் முடிவடையும். அதேபோல பனிக்காலம் அக்டோபரில் தொடங்கி மார்ச்சில் முடியும் என்பதால் ஹிமாச்சல பிரதேசத்தை சுற்றிப் பார்க்க மிகவும் ஏற்ற பருவமாகும்.

இதையடுத்து கடந்த 3 நாட்களாக ஹிமாச்சல பிரதேசத்தில் கடும் குளிர் வாட்டியது. தலைநகரில் இருந்து 250 கி.மீ தூரத்தில் உள்ள கல்பா என்ற இடத்தில் மைனஸ் 2.6 டிகிரி செல்சியஸ், மணலியில் மைனஸ் 6 டிகிரி செல்சியஸ், தல்ஹவுசியில் 1.7 டிகிரி செல்சியஸ், தரம் சலாவில் 2.2 டிகிரி செல்சியஸ் என பதிவாகியுள்ளது. சிம்லாவில் 4 டிகிரி செல்சியசுக்கு குறைவாக வானிலை காணப்பட்டது. சிம்லாவில் பனிப்பொழிவின் காரணமாக அனைத்து பேருந்துகளும் ஓடவில்லை. 

இந்நிலையில், ஹிமாச்சல பிரதேசத்தில்  தொடர்ந்து மூன்று நாட்களுக்கு பிறகு, பனிப்பொழிவு மற்றும் மழை சற்று குறைந்துள்ளதாகவும் ஆனால் மலைப்பகுதிகளில் குளிர் குறையாமல் தொடர்ந்து வருவதாகவும் வானிலை ஆய்வு மையத்தின் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும் இனி பலத்த பனி மற்றும் மழைக்கு வாய்ப்பில்லை எனவும் தற்போது பேருந்து இயக்கம் சீராக உள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் வார இறுதியில் பனிப்பொழிவு இருக்கலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.