இமாச்சல் நிலச்சரிவு
இமாச்சல் நிலச்சரிவு புதிய தலைமுறை
இந்தியா

கண் இமைக்கும் நேரத்தில் சரிந்து கரைந்த வீடுகள்; இமாச்சலில் நிலச்சரிவில் சிக்கி இதுவரை 60 பேர் பலி!

Prakash J

தென் மேற்கு பருவமழை தொடங்கியதிலிருந்தே இந்தியாவின் வட மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. டெல்லியில் வரலாறு காணாத மழை பெய்தது. உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியனா, பீகார் எனப் பல மாநிலங்கள் வெள்ளத்தில் தத்தளித்தன. இந்த நிலையில், இமாச்சல பிரதேசத்தில் கடந்த சில நாட்களாகப் பரவலாக கனமழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதில் வீடுகள் மண்ணில் புதைந்தன. தொடர்ந்து கனமழை பெய்துவருவதாலும், அடுத்தடுத்து நிலச்சரிவுகள் ஏற்படுவதாலும் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சிம்லாவின் சம்மர் ஹில் பகுதியில் மீண்டும் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

இதில் சிக்கி 21 பேர் காணாமல் போனதாக அதிகாரிகள் தெரிவித்துள்ள நிலையில், இதுவரை 12 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ளவர்களைத் தேடும் பணிகளில், மோப்ப நாய் உதவியுடன் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மாநிலத்தில் நிலச்சரிவுகளில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 60ஆக உயர்ந்துள்ளது.

மேலும், நிலச்சரிவு, திடீர் வெள்ளம் மற்றும் மேக வெடிப்பு காரணமாக சிம்லாவின் கோடை மலை, கிருஷ்ணா நகர், ஃபாக்லி உள்ளிட்ட இமாச்சல பிரதேசத்தின் பல மாவட்டங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் பார்வையிட்ட அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு, ”பாதிப்பு அதிகளவில் உள்ளது. ரூ.10,000 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய, மாநில பேரிடர் குழுவினர் தொடர்ந்து மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்” என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், ”இமாச்சலப் பிரதேசத்தில் இந்தப் பருவமழை தொடங்கியதிலிருந்து இதுவரை 170 மேகவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. நிலச்சரிவுகளால் 9,600க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்தன. கடந்த 3 நாட்களில் மட்டும் இயல்பைவிட 157 சதவீதம் அதிகம் மழை பெய்துள்ளது. மழையால் துண்டிக்கப்பட்ட 1220 சாலைகளில் 400 சாலைகள் மறுசீரமைக்கப்பட்டுவிட்டன. ஆனால், தொடர்ந்து மழை பெய்வது மீண்டும் மீண்டும் புதிய சவால்களைக் கொண்டு வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து மோசமான வானிலை காரணமாக மாநிலத்தில் உள்ள அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்படுவதாகவும், இமாச்சல பிரதேச பல்கலைக்கழகம் ஆகஸ்ட் 19 வரை மூடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.