நடிகை கங்கனா ரனாவத், கடந்த ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் இமாச்சல் பிரதேசத்தில் பாஜக சார்பில் போட்டியிட்டு எம்பியாகத் தேர்வானார். தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்துகளைத் தெரிவித்து வரும் கங்கனா ரனாவத், சமூக வலைத்தளத்தில் உற்சாகத்துடனும் இயங்கி வருகிறார்.
இந்த நிலையில், இமாச்சல் பிரதேசம் மணாலியில் உள்ள தனது ஆளில்லாத வீட்டிற்கு ஒரு மாதத்திற்கு சுமார் ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்திருப்பதாக மாநில மின்சார வாரியத்தின் மீது குற்றஞ்சாட்டியிருந்தார்.
மண்டியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இதுதொடர்பாக பேசிய ரனாவத், “இமாச்சலப் பிரதேசத்தில், ஆளும் காங்கிரஸ் அரசு, மோசமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. இந்த மாதம், மணாலியில் உள்ள எனது வீட்டிற்கு ரூ.1 லட்சம் மின் கட்டணம் வந்துள்ளது. அங்கு நான் தங்கவே இல்லை. இங்குள்ள நிலைமைகளை கற்பனை செய்து பாருங்கள்" எனக் கூறியிருந்தார். அவரது வீடியோ இணையத்தில் வைரலான நிலையில், பலரும் அவரது பதிவுக்கு கருத்துகளைப் பகிர்ந்து வந்தனர்.
இந்த நிலையில், ரனாவத் சொன்ன மின் கட்டணம் ரசீது தொடர்பாக மாநில மின்சார வாரியம் இன்று பதிலளித்துள்ளது. அத்துடன் ரனாவத்தின் கூற்றையும் மறுத்துள்ளது. இதுகுறித்து மின்சார வாரிய நிர்வாக இயக்குநர் சந்தீப் குமார், ”ஜனவரி 16 முதல் கங்கனா ரனாவத் எந்த கட்டணத்தையும் செலுத்தவில்லை. அவர் தொடர்ந்து மின் கட்டணம் செலுத்துவதை தாமதப்படுத்தி வருகிறார். தற்போதைய கட்டணம், ஒரு மாதத்திற்கு மட்டுமே என்று அவர் கூறுவது முற்றிலும் தவறானது.
தோராயமாக, அவருக்கு ரூ.31,000 முதல் ரூ.32,000 வரை நிலுவைத் தொகை உள்ளது. மார்ச் மாதத்தில் மட்டும் 28 நாட்களுக்கு அவருடைய மின்சாரக் கட்டணம் சுமார் ரூ.55,000. இது தவிர மற்ற மாத கட்டணங்கள் உட்பட மொத்தம் கிட்டத்தட்ட ரூ.90,384 ஆகும். ஆகையால், இதையெல்லாம் மறைத்து அவர் தனது வீட்டின் ரூ.1 லட்சம் மின் கட்டணத்தை செலுத்துமாறு மின்சார வாரியம் கேட்டுள்ளதாக ஒரு பிரச்னையை எழுப்பியுள்ளார்.
பில் கிட்டத்தட்ட ரூ.91,000. நவம்பர்-டிசம்பர் மாதங்களுக்கான பில் ஜனவரி 16 ஆம் தேதி செலுத்தப்பட்டது, அதன்பிறகு அவர் ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கான பில் செலுத்தவில்லை. மேலும் மார்ச் மாதத்தின் 20 நாட்களின் சுழற்சியும் சேர்க்கப்பட்டுள்ளது. சரியான நேரத்தில் பில்லைச் செலுத்தியிருந்தால், தொகை கணிசமாகக் குறைந்திருக்கும். மொத்தமாக 14,000 யூனிட்கள் மின் நுகர்வு மற்றும் அபராதம் விதிக்கப்பட்டது. அவரது மின் சுமை சராசரி உள்நாட்டு பயனாளியைவிட கணிசமாக அதிகமாக இருந்தது.
ரனாவத்தின் வீட்டில் 94.82 கிலோவாட் இணைக்கப்பட்ட மின் சுமை உள்ளது. இது ஒரு நிலையான வீட்டின் மின் சுமையைவிட 1,500 சதவீதம் அதிகம். அவரது மாதாந்திர மின்சார நுகர்வு சராசரியாக 5,000 முதல் 9,000 யூனிட்டுகள் வரை உள்ளது. இது கணிசமாக அதிகமாகும். கங்கனா ரனாவத்கூட அரசாங்கத்தின் மின்சார கட்டண மானியத்தை தவறாமல் பயன்படுத்தி வருகிறார். உண்மையில், மாநில அரசின் மின்சார மானிய திட்டத்தின்கீழ் பிப்ரவரி மாத பில்லில் ரூ.700 மானியம் பெற்றார், இதை பலர் தானாக முன்வந்து கைவிடுகிறார்கள். மேலும், இந்த விஷயம் பகிரங்கப்படுத்தப்படுவதற்கு முன்பு கங்கனா தரப்பிலிருந்து யாரும் மின்சார வாரியத்தை நேரடியாகத் தொடர்பு கொள்ளவில்லை” என ANIக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.