இந்தியா

இமாச்சல பிரதேசத்தில் நவ. 9-ல் சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

இமாச்சல பிரதேசத்தில் நவ. 9-ல் சட்டசபை தேர்தல்: தேர்தல் ஆணையம் அறிவிப்பு

rajakannan

இமாச்சல பிரதேசம் மாநிலத்திற்கான சட்டசபை தேர்தல் வருகின்ற நவம்பர் 9-ம் தேதி நடைபெறும் என்று தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வீரபத்ர சிங் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கும் இமாச்சலில் 68 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. தற்போதைய காங்கிரசின் ஆட்சிக் காலம் ஜனவரியில் நிறைவடைகிறது. இந்த நிலையில் வருகின்ற நவம்பர் 9-ல் இமச்சல பிரதேச சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறும் என்று டெல்லியில் தலைமை தேர்தல் ஆணையர் அச்சல்குமார் ஜோதி அறிவித்தார். வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என்றும் அதற்கு முன்பாக குஜராத் சட்டசபை தேர்தல் நடைபெறும் என்றும் கூறினார். மேலும், தேர்தல் வரலாற்றில் முதன்முறையாக இமச்சாலப் பிரதேச சட்டசபை தேர்தலில் 136 வாக்குச் சாவடிகளில் பெண் அதிகாரிகளை மட்டுமே கொண்டு வாக்குப் பதிவு நடைபெறவுள்ளதாக தேர்தல் ஆணையர் தெரிவித்தார். 

இமாச்சல பிரதேச சட்டசபை தேர்தலின் முக்கிய தேதிகள்:-

தேர்தலுக்கான அறிக்கை அக். 16-ல் வெளியாகும்

வேட்பு மனுதாக்கல் செய்ய கடைசி நாள் அக். 23

வேட்பு மனுக்களை திரும்ப பெற கடைசி நாள் அக். 24

வாக்குப் பதிவு - நவம்பர் 9

வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 18


தேர்தல் ஆணையரின் சில அறிவிப்புகள்:-

இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன

பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யும் போது அனைத்து விவரங்களையும் தெரிவிக்க வேண்டும்

தேர்தலில் செலவு செய்ய வேட்பாளருக்கு ரூ.28 லட்சம் வரை மட்டுமே அனுமதி

ஆலோசனைகளை பெற சமூக வலைதளங்களை பயன்படுத்த உள்ளோம்

மாநில காவல்துறையினருடன் துணை ராணுவப் படையினரும் பாதுகாப்பில் ஈடுபடுவார்கள்

இமாச்சல பிரதேசத்தில் மொத்தம் 7,521 வாக்குச்சாவடிகள்