இமாச்சலப்பிரதேசம் சட்டப்பேரவை தேர்தலில் இதுவரை இல்லாத அளவிற்கு அதிகளவில் வாக்குகள் பதிவாகியுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இமாச்சலப்பிரதேசத்தின் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இமாச்சலப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 68 தொகுதிகளிலுமே காங்கிரஸ் மற்று பாரதிய ஜனதா கட்சிகள் நேரடியாக போட்டியிட்டன. தற்போதைய முதலமைச்சர் வீர்பத்ர சிங், அவரது அமைச்சரவையில் அமைச்சர்களாக உள்ள 10 பேர், முன்னாள் முதலமைச்சர் பிரேம்குமார் துமல் உள்ளிட்டோர் இந்தத் தேர்தலில் களத்தில் இறங்கினர். பாஜக சார்பில் முதலமைச்சர் வேட்பாளராக துமல் முன்னிறுத்தப்பட்டார். பகுஜன் சமாஜ் கட்சியும் 42 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.
இன்று பரபரப்பாக நடைபெற்ற வாக்குப்பதிவில், இதுவரை இல்லாத அளவிற்கு அதிகளவில் வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. மாலை 5 மணி தகவலின்படி 74% வாக்குப்பதிவாகியிருந்தது. கடந்த 2012 சட்டப்பேரவை தேர்தலின் போது மொத்த வாக்குப்பதிவு 73.5%, 2014 மக்களவைத் தேர்தலின் போது 63.45% இருந்த நிலையில் இந்த முறை 85% வாக்குப்பதிவை எட்டும் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அத்துடன் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை உறுதிசெய்யும் ஒப்புகை சீட்டும் வழங்கும் இயந்திரமும் முதன்முறையாக இந்தத் தேர்தலில் பயன்படுத்தப்பட்டுள்ளது.