இந்தியா

மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை.. வெள்ளத்தில் மிதக்கும் தர்மசாலா

மேகவெடிப்பால் கொட்டி தீர்த்த மழை.. வெள்ளத்தில் மிதக்கும் தர்மசாலா

Veeramani

இமாச்சலப் பிரதேசத்தின் தர்மசாலாவில் உள்ள மெக்லியோட் கஞ்ச் அருகே மேகவெடிப்பு காரணமாக ஏற்பட்ட பெரும் வெள்ளத்தால் பாக்சு பகுதியில் உள்ள பொது சொத்துக்களுக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டது.

இமாச்சலில் கடந்த சில நாட்களாகவே பலத்த மழை பெய்து வருகிறது. தற்போது மேகவெடிப்பினால் ஏற்பட்ட வெள்ளத்தில் பல கார்கள் அடித்துச் செல்லப்பட்டதுடன், பல கட்டிடங்கள் மற்றும் ஹோட்டல்கள் சேதமடைந்தன. மேலும், மாநிலத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து மஞ்சி நதி நிரம்பியதால் 10க்கும் மேற்பட்ட கடைகளும் சேதமடைந்தன. கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக சிம்லா மாவட்டத்தின் ராம்பூர் பகுதியில் ஜாக்ரி தேசிய நெடுஞ்சாலை தடை செய்யப்பட்டுள்ளது.

காங்க்ரா மாவட்டத்தில் பலத்த மழை மற்றும் வெள்ளம் காரணமாக இரண்டு பேர் காணாமல் போயுள்ளதாக துணை ஆணையர் நிபூன் ஜிண்டால் தெரிவித்துள்ளார். இளைஞர் காங்கிரஸ் தலைவர் பி.வி.சீனிவாஸ், பெரும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள சுற்றுலாப் பயணிகள் மற்றும் உள்ளூர்வாசிகளுக்கு உதவுமாறு கட்சித் தொண்டர்களை வலியுறுத்தியுள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தில் வரும் நாட்களில் பல இடங்களில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. ஜூலை 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் சமவெளி மற்றும் நடு மலைகளில் கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு வானிலை எச்சரிக்கையும், ஜூலை 14 மற்றும் 15 ஆம் தேதிகளுக்கு மஞ்சள் வானிலை எச்சரிக்கையையும் வானிலை ஆய்வு மையம்  வெளியிட்டுள்ளது.