இந்தியா

“கொரோனா தடுப்பூசி இலவசமாக கிடைப்பதே பெட்ரோல் மீதான வரியில் இருந்துதான்” - மத்திய அமைச்சர்

JustinDurai
'மத்திய அரசு இலவசமாக கொரோனா தடுப்பூசிகள் வழங்கி வருவது, பெட்ரோல், டீசல் மீது பெறப்பட்டு வரும் வரியில் இருந்துதான்' என்று கூறியுள்ளார் மத்திய இணையமைச்சர் ராமேஸ்வர் தெலி.
அசாம் மாநிலம் கவுகாத்தியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தெலி, ''மத்திய மற்றும் மாநில அரசுகள் பெட்ரோலுக்கு வரி விதித்துள்ளன. நீங்கள் கொரோனா தடுப்பூசிகளை இலவசமாகப் பெறுகிறீர்கள். நீங்கள் தடுப்பூசிகளுக்குப் பணம் செலுத்துவதில்லை. எனில் கொரோனா தடுப்பூசிகளுக்கான பணம் எங்கிருந்து வருகிறது? தடுப்பூசிகளுக்கான விலை இந்த வரிகளிலிருந்து வருகிறது.
நமது அரசு 130 கோடி மக்களுக்கு இலவசமாகத் தடுப்பூசி போடுவதை இலக்காகக் கொண்டுள்ளது. ஒரு தடுப்பூசியின் விலை சுமார் ரூ.1,200. ஒவ்வொரு நபருக்கும் 2 தவணை தடுப்பூசி செலுத்த வேண்டும். எனவே இதற்கு ஆகும் செலவீனங்களை ஈடுகட்ட பெட்ரோல், டீசல் விலை உயர்வை தவிர்க்க முடியாது.
ஒரு லிட்டர் பெட்ரோல் அடிப்படை விலை ரூ.40. மத்திய மற்றும் மாநில அரசுகள் விதிக்கும் வரிதான் மிச்சத் தொகையாக உள்ளது. நாட்டிலேயே குறைவான வாட் வரியை விதிப்பது அசாம் மாநிலம்தான். ராஜஸ்தானில் ஆளும் காங்கிரஸ் அரசு, நாட்டிலேயே அதிக அளவுக்கு பெட்ரோல் மீது வாட் வரி விதிக்கிறது. மகாராஷ்டிரா மாநில அரசும் அதிக வாட் வரியை விதிக்கிறது. ஆனால் கெட்ட பெயர் மத்திய அரசுக்கு வருகிறது. ஒரு லிட்டர் பெட்ரோலை விட ஒரு லிட்டர் இமயமலை தண்ணீர் விலை அதிகம்'' என்று ராமேஸ்வர் தெலி தெரிவித்தார்.