ஹிஜாப் தொடர்பான வழக்குகளை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு இன்று விசாரிக்க உள்ளது.
கர்நாடகாவில் சில பள்ளிகளில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹிஜாப் தடையை எதிர்த்து இஸ்லாமிய மாணவிகள் தரப்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்திலும் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இவற்றை விசாரித்த நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித், வழக்குகளை கூடுதல் நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் எனத் தெரிவித்தார். இந்த வழக்குகள் தனி நபர் சட்டம் தொடர்பான அரசியல் சாசன சட்ட அடிப்படையிலான சில கேள்விகளை எழுப்புவதாகவும் என இதை கூடுதல் அமர்வுக்கு மாற்றுவதாகவும் நீதிபதி தனது உத்தரவில் கூறியிருந்தார். மேலும் இவ்வழக்குகளில் மனுதாரர்கள் கோரும் இடைக்கால நிவாரணம் குறித்தும் கூடுதல் அமர்வே முடிவெடுக்கும் என்றும் நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் தெரிவித்தார்.
ஹிஜாப் விவகாரம் தொடர்பாக பெங்களூருவில் கல்வி நிறுவனங்கள் அருகே கூட்டங்கள், போராட்டங்கள் நடத்த 2 வாரங்களுக்கு கர்நாடக காவல் துறை தடை விதித்துள்ளது. கல்வி நிறுவனங்களில் ஹிஜாபோ அல்லது காவித்துண்டோ எதையும் தாங்கள் ஆதரிக்கவில்லை என கர்நாடக வருவாய்த்துறை அமைச்சர் அசோகா தெரிவித்தார். இவ்விவகாரத்தில் நீதிமன்ற வழிகாட்டுதல் படி தங்கள் அரசு செயல்படும் என அம்மாநில உள்துறை அமைச்சர் அரகா ஞானேந்திரா தெரிவித்துள்ளார்.இதனிடையே, ஹிஜாப் தொடர்பான வழக்கை கூடுதல் அமர்வுக்கு மாற்றிய நிலையில், தலைமை நீதிபதி ரித்து ராஜ் அஸ்வதி, நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் மற்றும் நீதிபதி ஜே.எம்.காஜி அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட்டுள்ளது. ஹிஜாப் தொடர்பான வழக்கை இந்த அமர்வு இன்று விசாரிக்கவுள்ளது.