இந்தியா

சுங்கச்சாவடிகளில் சலுகை பெற ஃபாஸ்டேக் கட்டாயம் : நெடுஞ்சாலைத்துறை

webteam

சுங்கச் சாவடிகளில் சலுகைகளைப் பெறுவதற்கு ஃபாஸ்டேக் கட்டாயமாக்கப்படுவதாக மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

இந்தியா முழுவதும் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்கள் சுங்கச்சாவடிகளில் விரைவாக பணம் செலுத்த ஃபாஸ்டேக் (FASTag) முறை பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் 24 மணி நேரத்துக்குள் சுங்கச்சாவடி வழியே சென்றுவிட்டு மீண்டும் திரும்பு வாகனங்கள், உள்ளூர்பகுதிக்கான விலக்குகள் கோரும் வாகனங்கள் உள்ளிட்டவை சலுகைகளை பெறுவதற்கு ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் ஒட்டியிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலைகள் கட்டண விதிகள் 2008ல் அதற்கான திருத்தம் செய்வதற்கு, 2020 ஆகஸ்ட் 24 ஆம் தேதியிட்ட அரசிதழ் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளின் சுங்கச்சாவடிகளில் டிஜிட்டல் பரிவர்த்தனையை ஊக்குவிப்பதற்கான மற்றொரு முயற்சியாக இது பார்க்கப்படுகிறது. முன்னதாகவே பணம் செலுத்தி இருத்தல், ஸ்மார்ட் அட்டை அல்லது ஃபாஸ்டேக் மற்றும் டிரான்ஸ்பான்டர் அல்லது வேறு சாதனங்கள் மூலமாக மட்டுமே இந்தச் சலுகைகளைப் பெற முடியும்.

இந்த விதிகளின் திருத்தங்கள் காரணமாக 24 மணி நேரத்துக்குள் சுங்கச்சாவடி வழியே சென்று திரும்பி வரும்போது ஃபாஸ்டேக் அல்லது வேறு சாதன வசதி இருந்தால் தானியங்கி முறையில் சலுகை கிடைக்கும். அதற்கான உரிய ஃபாஸ்டேக் ஸ்டிக்கர் இருந்தால் தானாகவே சலுகைக் கட்டணம் கணக்கிடப்படும் என சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் விளக்கமளித்துள்ளது.