ஒரு பக்கம் உச்சநீதிமன்றம் ஆதார் சட்டம் செல்லும் என்று தீர்ப்பளித்திருந்தாலும் அதிகம் கவனிக்கப்பட்ட மற்றொன்று இருந்தது. நீதிபதி சந்திரசுத் ஆதார் விவகாரத்தில் எழுப்பிய முரண்பட்ட தீர்ப்பே அது. ஆதார் மசோதாவை நிதி மசோதாவாக நிறைவேற்ற சபாநாயகர் முடிவு செய்து கொள்ளலாம் என பெரும்பான்மை நீதிபதிகள் கூறியது , அந்த முறையே ஒரு அரசியல் சாசனத்தின் ஏமாற்று வேலை என கடுமையாக தெரிவித்தார் நீதிபதி சந்திரசுத்.
* ஆதார் தகவல்களை சேகரிப்பதும், அதனை உறுதி செய்வதும் அரசு அமைப்புகளிடம் இல்லை. தனியார் அமைப்புகள் பெரும்பாலும் அதனை செய்கின்றன. கருவிழி தொடங்கி, கைரேகை வரை முக்கியமான தகவல்கள் சேகரிக்கும் பொறுப்பை தனியாரிடம் கொடுத்ததே, தகவல்கள் பாதுகாப்பில்லாமால் போகும் என்பதன் முதல் நிலை
* ஆதார் இருந்தும் தொழில்நுட்ப கோளாறால் ஏற்படும் சிக்கல்களால் அத்தியாவசிய தேவைகளை மக்கள் பூர்த்தி செய்ய முடியாமல் போகிறது ; குறிப்பாக கிராமப்புறங்களில் இது தொடர்ந்து நடக்கிறது
* 120 கோடி பேரின் தகவல்களை திரட்டி விட்டு, அதனை எந்தவிதமான பாதுகாப்பும் இல்லாமல் மத்திய அரசு வைத்திருக்கிறது ; மிக எளிதில் திருடப்படும் ஒன்றாக மக்களின் அந்தரங்க தகவல்கள் இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது
* சிம் கார்டு என்ற பெயரில் தனியார் நிறுவனங்கள் பெற்ற ஆதார் தகவல்கள் 2 வாரத்தில் முழுமையாக அழிக்கப்பட வேண்டும்
* ஆதார் சட்டமே முழுக்க முழுக்க அரசியல் சாசனத்துக்கு எதிரானது
* ஆதார் வழக்கு நடக்கும் போதே, மக்களை கட்டாயப்படுத்தி அனைத்து சேவைகளோடும் ஆதாரை இணைக்க வேண்டும் என அரசு அழுத்தம் கொடுத்தது ; நீதிமன்ற உத்தரவுகளையே காற்றில் பறக்க விடும் அரசு, மக்களை எந்த அளவையால் அளக்கும் என சொல்லித்தான் தெரிய வேண்டுமா ?