இந்தியா

33 வார கருவை கலைக்க பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி - பின்னணி என்ன?

33 வார கருவை கலைக்க பெண்ணுக்கு நீதிமன்றம் அனுமதி - பின்னணி என்ன?

JustinDurai

ஒரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் கர்ப்பத்தை கலைத்துக் கொள்ள விரும்புகிற பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

டெல்லியை சேர்ந்த 26 வயதான பெண் ஒருவர் திருமணத்துக்கு பின்னர் கர்ப்பமடைந்தார். ஆனால் அந்த பெண்ணுக்கு ஸ்கேன் பரிசோதனை செய்து பார்த்தபோது, அவரது வயிற்றில் வளரும் குழந்தை பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதனால் கவலையடைந்த அந்த பெண் கருவைக் கலைத்து விடலாம் என முடிவெடுத்து மருத்துவமனைக்கு சென்றுள்ளார். ஆனால் சட்டத்தின்படி 24 வாரங்களுக்குள்தான் கருக்கலைப்பு செய்ய முடியும் எனவும் கர்ப்பம் 24 வாரங்களைக் கடந்து விட்டதால் நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுத்தான் கருக்கலைப்பு செய்ய முடியும் எனவும் கூறி விட்டனர்.

இதையடுத்து அப்பெண் கருக்கலைப்புக்கு அனுமதி கேட்டு டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கருவில் வளரும் குழந்தை பெருமூளைக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருப்பது தாமதமாகவே தனக்கு தெரியவந்ததாகக் கூறி, கருக்கலைப்பு செய்துகொள்ள அனுமதிக்க வேண்டும் என்று வழக்கில் அந்த பெண் கோரிக்கை வைத்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி பிரதிபா எம்.சிங், கருவை மருத்துவ ரீதியாக கலைத்துக்கொள்ள அனுமதி அளித்து தீர்ப்பு வழங்கினார். இத்தகையதொரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில் கர்ப்பத்தை கலைத்துக் கொள்ள விரும்புகிற பெண்ணுக்கு ஆதரவாக இருக்க வேண்டும். பிறக்கப்போகும் குழந்தையின் கண்ணியமான வாழ்க்கைக்கான வாய்ப்பை அங்கீகரிக்க வேண்டும் என நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க: சிதைந்த சடலத்துக்குள் உயிரோடு இருந்த பாம்பு: உடற்கூராய்வு நிபுணரை கதிகலங்கச் செய்த சம்பவம்