மத்தியப் பிரதேசத்தில் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக காவல்துறை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்தியப் பிரதேசத்தின் ஜாபுவா மாவட்டத்தில் ஆப்கானிஸ்தானின் குனார் மாகாணத்தை சேர்ந்த தீவிரவாதி ஒருவனின் நடமாட்டம் இருந்ததாக காவல்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்தத் தீவிரவாதி காவல்நிலையங்கள் மற்றும் சோதனை சாவடி பகுதிகள் சுற்றுத்திரிவதாக கூறப்பட்டுள்ளது. அவருடன் மேலும் சில தீவிரவாதிகள் சுற்றித்திரியலாம் எனப்படுகிறது. இதனால் நேற்று மாலை முதல் மத்தியப் பிரதேச காவல்துறை தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
குறிப்பாக ஜபுவா, அலிராஜ்புர், தார் மற்றும் பர்வானி ஆகிய மாவட்டங்களின் எல்லைகளில் கூடுதல் கண்காணிப்பு பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அத்துடன் குஜராத் மற்றும் ராஜஸ்தான் எல்லை மாவட்டங்களான ராட்லம், மான்சவுர், நிமுச் மற்றும் அகர்-மால்வா ஆகிய மாவட்டங்களில் தேடுதல் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ராட்லம் மாவட்டத்தில் 10 சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், குஜராத் மற்றும் ராஜஸ்தானில் இருந்து வரும் ரயில்களிலும் தீவிர தேடுதல் நடத்தப்பட்டு வருகிறது.
கடந்த வாரம் மத்தியப் பிரதேசத்தின் இந்தூரில் ஜாஹிருல் ஷாயக் என்பவர் என்.ஐ.ஏ போலீஸாரால் கைது செய்யப்பட்டார். அவர் 2014ஆம் ஆண்டு புர்துவானில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தின் குற்றவாளி ஆவார். இந்நிலையில் தான் ஆப்கானிஸ்தான் தீவிரவாதிகள் இந்தியாவிற்குள் ஊடுருவியுள்ள தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்கள் எப்படி இந்தியாவிற்குள் ஊடுருவினார்கள் என்ற தகவல் இன்னும் தெரியவரவில்லை.