இந்தியா

சத்தீஸ்கர் தாக்குதலில் 'மூளை'யாக செயல்பட்ட ஹிட்மா (எ) ஹிட்மன்னா யார்?

சத்தீஸ்கர் தாக்குதலில் 'மூளை'யாக செயல்பட்ட ஹிட்மா (எ) ஹிட்மன்னா யார்?

webteam

சத்தீஸ்கரில் நடந்த மாவோயிஸ்ட் தாக்குதலில் மூளையாக இருந்து செயல்பட்ட ஹிட்மா என்கிற ஹிட்மன்னா என்பவர் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜாப்பூர் டாரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் மீது பாதுகாப்பு படையினர் தாக்குதல் நடத்தினர். அப்போது, மாவோயிஸ்டுகளும் பதில் தாக்குதல் நடத்தினர். இந்த மோதலின்போது, பாதுகாப்பு படையினர் 22 பேர் வீர மரணம் அடைந்தனர்.

சத்தீஸ்கர் மாநிலம் பிஜப்பூர் - சுக்மா மாவட்ட எல்லையில் உள்ள வனப்பகுதியில் சிஆா்பிஎஃப் கமாண்டோ பிரிவு, மாவட்ட ஆயுத காவல்படை, சிறப்பு அதிரடிப் படை உள்ளிட்ட படைப் பிரிவுகளைச் சோ்ந்த வீரா்கள் கூட்டாக மிகப் பெரிய அளவில் சனிக்கிழமை தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனா். அப்போது அடர்ந்த வனப்பகுதிக்குள் மறைந்திருந்த மாவோயிஸ்டுகள், பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தி இருக்கின்றனர்.

இதுதொடர்பான உளவுத்துறையின் அறிக்கையில், "கிளர்ச்சி நடவடிக்கைகள் தொடங்கப்பட்ட அதே பகுதியில் ஆயுதமேந்திய மாவோயிஸ்டுகளின் ஒரு பெரிய குழு காத்திருந்தது. பாதுகாப்புப் படையினரை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் நக்சல்கள் மறைந்திருந்து தாக்கினர். இதன் விளைவாக துப்பாக்கிச் சண்டை மூன்று மணி நேரத்திற்கும் மேலாக தொடர்ந்தது. மாவோயிஸ்டுகளின் இவ்வளவு பெரிய மூளையாக இருந்தவர் மாவோயிஸ்டு பட்டாலியன் 1-ன் தளபதி ஹிட்மா என்ற ஹிட்மன்னா என்பவர்தான்" என்று தெரிவித்துள்ளது.

யார் இந்த ஹிட்மா என்கிற ஹிட்மன்னா?

சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தின் புவர்த்தி கிராமத்தைச் சேர்ந்த பழங்குடியின இனத்தைச் சேர்ந்தவர் ஹிட்மா. இவருக்கு சுமார் 40 வயது இருக்கும் என கணிக்கப்படுகிறது. ஹிட்மா 90-களின் காலகட்டத்தில் மாவோயிஸ்ட் குழுக்களுடன் இணைந்திருக்கிறார். தற்போது மக்கள் விடுதலை கொரில்லா ராணுவத்தின் (பி.எல்.ஜி.ஏ) பட்டாலியன் எண் 1-க்கு தலைமை தாங்குகிறார். மாவோயிஸ்டுகள் மத்தியில் கடுமையானதும், ஆபத்தானதுமான தாக்குதல்களுக்கு பெயர் பெற்றவர் ஹிட்மா. பெண்கள் உள்பட 180 முதல் 250 மாவோயிஸ்ட் போராளிகளை வழிநடத்தி வருகிறார்.

மாவோயிஸ்டுகள் தண்டகரண்யா சிறப்பு மண்டலக் குழுவில் (டி.கே.எஸ்.இசட்) உறுப்பினராகவும் இருக்கிறார். இதேபோல் சிபிஐ (மாவோயிஸ்டுகள்) 21 பேர் கொண்ட 'மத்திய குழு'வின் உறுப்பினர் ஆகவும் உள்ளார். உறுதிப்படுத்தப்படாத சில அறிக்கைகள், அவர் மத்திய ராணுவ ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறுகின்றன. ஹிட்மாவின் சமீபத்திய படங்கள் எதுவும் கிடைக்கவில்லை. பீம் மண்டவி கொலை வழக்கில் ஹிட்மா தொடர்புடையவர் எனக் கூறப்படுகிறது. இதன்காரணமாக, ஏற்கெனவே அவரை கண்டுபிடித்து கொடுப்பவர்களுக்கு ரூ.40 லட்சம் வெகுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில்தான் மாவோயிஸ்ட்கள் சனிக்கிழமை நடத்திய தாக்குதல்கள், ஹிட்மா தலைமையில் நடைபெற்றது. மாவோயிஸ்ட் படைப்பிரிவுகளான பாமேட், கொன்டா, ஜாகர்குண்டா மற்றும் பசகுடா பகுதி குழுக்களுடன் தொடர்புடைய கிளர்ச்சியாளர்கள் ஏறக்குறைய 250 பேர் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

- தகவல் உறுதுணை: India Today