ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது என்பார்கள். அதுதான் கர்நாடகாவிலும் அரங்கேறி இருப்பதாகச் சொல்லப்படுகிறது. கர்நாடகாவில் முதலமைச்சராக டி.கே.சிவகுமார் அரியணை ஏறினாலும், அதிகாரம் என்னவோ முன்னாள் முதல்வர் சித்தராமையாவிடமே இருப்பதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கர்நாடகத்தில் முதல்வர் யுத்தம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு முடிவுக்கு வந்துள்ளது. சித்தராமையா தனது பதவி விலகல் கடிதத்தை அளித்த நிலையில், டி.கே.சிவகுமார் முதல்வராகப் பதவியேற்றுள்ளார். அவருடன் 13 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டுள்ளனர். இந்த நிலையில், முதலமைச்சர் பதவியில் இருந்து சித்தராமையா விலகிய பின்னரும்கூட, கர்நாடக அரசியலில் அவர் கணிசமான செல்வாக்கைத் தொடர்ந்து செலுத்தி வருகிறார் என்கின்றனர் நன்கு விவரமறிந்தவர்கள். இதற்கு உதாரணமாய் சாதி மற்றும் செல்வாக்குக் கணக்கீடுகளுக்கு மத்தியில், டி.கே.எஸ்ஸின் அமைச்சரவை பட்டியலில் சித்தராமையாவின் விசுவாசிகளே அதிகளவில் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். டி.கே.சிவகுமார் அமைச்சரவையில் உள்ள 13 அமைச்சர்களில் ஆறு பேர் சித்தராமையாவின் ஆதரவு பெற்றவர்கள்.
இதில் முதன்முறையாக அமைச்சரவையில் இடம்பெற்ற சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையாவும் (சட்டமன்ற மேலவை உறுப்பினர்) அடங்குவார். புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட ஒரே அமைச்சரும் இவரே ஆவார். மீதமுள்ளவர்கள் சித்தராமையாவின் அமைச்சரவையில் அலங்கரித்தவர்கள் ஆவர்.
சித்தராமையாவின் ஆட்சிக்காலத்தில் சபாநாயகராக இருந்த யூ.டி.காதரும், புதிதாக அமைக்கப்பட்ட கர்நாடக அமைச்சரவையில் அமைச்சராகச் சேர்க்கப்பட்டுள்ளார். அடுத்து, துணை முதல்வராக இருக்கும் ஜி.பரமேஸ்வரா, சித்தராமையாவுக்கு நெருக்கமானவராகக் கருதப்படுகிறார். இதில் இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், டி.கே.எஸ் பிரிவைச் சேர்ந்தவர் என்று வெளிப்படையாகக் கருதக்கூடிய ஒரு சட்டமன்ற உறுப்பினர்கூட அதில் இடம்பெறவில்லை. இவற்றை உற்றுநோக்கும்போது, டிகேஎஸ் அமைச்சரவையின் கணிசமான பகுதி சித்தராமையாவின் அணியைச் சேர்ந்தது என்பது தெரியவருகிறது. இவற்றையெல்லாம் தாண்டி, கட்சியின் உயர்மட்டத் தலைமையான காங்கிரஸ் செயற்குழுவிற்கு (CWC) சித்தராமையா உயர்த்தப்பட்டுள்ளார்.
தவிர, முதல்வர் பதவியிலிருந்து அவர் விலகியபோதும் பெங்களூருவில் உள்ள முதலமைச்சர் பங்களாவை அவர் காலி செய்யவில்லை. இவற்றை எல்லாம் பார்க்கும்போது, கர்நாடக அரசியலில் சித்தராமையாவின் செல்வாக்குக் கொஞ்சமும் குறையவில்லை என்கின்றன வட்டாரங்கள். ஒட்டுமொத்தத்தில் டி.கே.எஸ்ஸிடம் அதிகாரத்தை ஒப்படைக்கப்பட்டிருந்தாலும், அரசாங்கத்தின் மீதான சித்தராமையாவின் தாக்கம் அப்படியே நீடிக்கிறது என்பதுதான் கர்நாடக அரசியலின் ஹாட் செய்தியாக உள்ளது.