இந்தியா

அதிக‌ வருவாய் ஈட்டும் புராதனச் சின்னங்களின் பட்டியல்: மாமல்லபுரத்துக்கு இடம்..!

அதிக‌ வருவாய் ஈட்டும் புராதனச் சின்னங்களின் பட்டியல்: மாமல்லபுரத்துக்கு இடம்..!

webteam

 நாட்டில் அதிக வருமானம் ஈட்டித் தரக்கூடிய முதல் 10 புராதனச் சின்னங்களின் பட்டியலை மத்திய சுற்றுலாத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

2018-19 ஆம் ஆண்டில் அதிக வருமானம் ஈட்டிய புராதனச் சின்னங்களின் பட்டியலில் டெல்லி ஆக்ராவில் அமைந்துள்ள தாஜ்மஹால் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இதற்கு அடுத்ததாக, ஆக்ரா கோட்டை இரண்டாவது இடத்தையும், டெல்லியில் உள்ள குதுப்மினார் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன. மேலும் டெல்லி செங்கோட்டை நான்காவது இடத்தையும், ஹுமாயுன் கல்லறை ஐந்தாவது இடத்தையும், பதேபூர் சிக்ரி ஆறாவது இடத்தையும், ஒடிசாவில் உள்ள சூரிய கோயில் ஏழாவது இடத்தையும் பிடித்துள்ளன.

இதனையடுத்து அதிக வருமானம் ஈட்டும் பட்டியலில் சென்னையில் உள்ள மாமல்லபுரம் எட்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஒன்பதாவது மற்றும் பத்தாவது இடங்களை மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள எல்லோரா மற்றும் எலிஃபேண்டா குகைகள் பிடித்துள்ளன.

கடந்த 2016-ஆம் ஆண்டு முதல், தொடர்ந்து முதல் 10 இடங்கள் பட்டியலில் மாமல்லபுரம் இடம்பெற்று வருகிறது. இது மட்டுமல்லாமல் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள தென்னிந்தியாவைச் சேர்ந்த ஒரே புராதனச் சின்னம் மாமல்லபுரம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேபோல் அதிக புராதனச் சின்னங்கள் உள்ள மாநிலங்களின் பட்டியலில் தமிழகம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தப் பட்டியலில் 745 புராதனச் சின்னங்களுடன் உத்தரப்பிரதேச மாநிலம் முதலிடத்திலும், 506 புராதனச் சின்னங்களுடன் கர்நாடகா இரண்டாவது இடத்திலும், 413 புராதனச் சின்னங்களுடன் தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளன.

இந்தியாவில் உள்ள மொத்த புராதனச் சின்னங்களின் எண்ணிக்கை என்பது 3,691. இந்த புராதனச் சின்னங்களை பராமரிக்க மற்றும் ஆய்வுகள் நடத்த மொத்தம் 5,976 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் இந்திய தொல்பொருள் ஆய்வு அமைப்பால் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது