இந்தியா

இனிமேல் உங்களின் வீடு தேடி வரும் டீசல்.. ஆனால்...?

Rasus

இனி வீட்டிலிருந்தபடியே ஆர்டர் செய்தால் உங்கள் வீடுகளை டீசல் தேடிவரும் என இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவித்துள்ளது.

2017-ஆம் ஆண்டு ஜூன் 15-ஆம் தேதி முதல் நாள்தோறும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமல்படுத்தப்பட்டது. எண்ணெய் நிறுவனங்கள்தான் பெட்ரோல், டீசல் விலையை நிர்ணயம் செய்து வருகின்றன. ஒருநாள் பெட்ரோல் விலை ஏறினால் மறுநாள் குறைகிறது. இதனால் பெட்ரோல், டீசல் விலையில் நிலையான தன்மை இல்லாமல் ஏற்ற இறக்கங்கள் நிலவி வருகின்றன.

இந்நிலையில் வீட்டிலிருந்தபடியே டீசலை ஆர்டர் செய்யலாம் என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. வீட்டுச் சாமான்கள் முதல் உணவுப் பொருட்கள் வரை அனைத்தும் வீடு தேடி வரும் இக்காலத்தில் டீசலும் வீடு தேடிவரும் என்ற அறிவிப்பு வாகன ஓட்டிகளை சந்தோஷப்படுத்தியுள்ளது. ஆனாலும் இதில் சிக்கல் இருக்கிறது. குறைந்தபட்சம் 200 லிட்டர் மற்றும் அதற்குமேல் ஆர்டர் செய்தால்தான் உங்களின் வீடு தேடி டீசல் வரும். இல்லையென்றால் நீங்கள் வழக்கம்போல பெட்ரோல் பங்கிற்கு சென்றுதான் டீசல் வாங்க வேண்டும். 

வீட்டிலிருந்தபடியே REPOSE APP என்ற செயலி மூலம் டீசலை ஆர்டர் செய்யலாம். ஆனால் டெலிவரிக்காக எந்தவித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஒரே நேரத்தில் 200 லிட்டரை வாங்கி நாங்கள் என்ன செய்யப்போகிறோம் என்ற கருத்துகளும் சமூக வலைத்தளங்களில் ஒருசேர எழுந்துள்ளன.