இந்தியா

‘நம்ம ஊரு ஜெ. சிலையே பரவாயில்லை போல’.. என்ன கொடுமை சார் இது!

‘நம்ம ஊரு ஜெ. சிலையே பரவாயில்லை போல’.. என்ன கொடுமை சார் இது!

webteam

பஞ்சாப் லூதியானா மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள பிரபலங்களின் மெழுகு சிலைகளை நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர். 

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் பிரபாகர் என்பவரின் மியூசியத்தில் உலகப் பிரபலங்கள் 52 பேரின் மெழுகுச் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதில் பிரதமர் மோடி, அப்துல்கலாம், அன்னை தெரசா, சச்சின் டெண்டுல்கர், மைகெல் ஜாக்சன் உள்ளிட்டோரின் மெழுகுச் சிலைகளும் இடம் பெற்றுள்ளன. அத்துடன் திரைப் பிரபலங்கள், விஞ்ஞானிகள் உள்ளிட்டோரின் சிலைகள் நிறுவப்பட்டுள்ளன.

இதில் பெரும்பாலான சிலைகள், அந்த சிலைக்குரியவர்களின் தோற்றத்திலிருந்து மாறுபட்ட உருவ அமைப்பை கொண்டவையாக உள்ளன. அந்தப் புகைப்படங்களை தற்போது நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் பரப்பி மியூசியத்தை கிண்டல் அடித்து வருகின்றனர். அத்துடன் அந்த சிலைகளின் இருக்கும் தோற்றங்களை நெட்டிசன்களே வேறு பிரபலங்களுடன் ஒப்பிட்டு வருகின்றனர். உதாரணத்திற்கு மைகெல் ஜாக்சன் சிலையை, மங்கல் பாண்டே என கிண்டல் செய்கின்றனர். இதனால் அந்த மியூசியத்தின் மெழுகுச் சிலைகள் தற்போது பஞ்சாப்பின் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் உள்ளது.

இந்தச் சம்பவம், கடந்த மாதம் மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் ஜெயலலிதாவின் வெண்கலச் சிலை திறக்கப்பட்டது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் இணைந்து அந்தச் சிலையை திறந்து வைத்தனர். ஜெயலலிதாவின் வெண்கல சிலையை பிரசாத் என்பவர்தான் வடிவமைத்திருந்தார். 

இந்த சிலையை கண்ட நெட்டிசன்கள் பலரும் தங்களது ஆதங்க கருத்தை பதிவு செய்திருந்தனர். அதில் ஜெயலலிதா சிலை போன்றே இல்லை என பலரும் கூறியிருந்தனர். சிலர் ஜெயலலிதாவின் சிலையை திறப்பதற்கு பதிலாக முன்னாள் அமைச்சர் வளர்மதியின் சிலையை திறந்திருப்பதாக ஒருவர் விமர்சனம் செய்திருந்தனர். அத்துடன் தயவுசெய்து சிலையில் ஜெயலலிதா என எழுதி ஒட்டவும் என்றெல்லாம் கிண்டல் அடித்திருந்தனர். 

ஆனால் தற்போது பஞ்சாப் மியூசித்தில் வைக்கப்பட்டுள்ள சிலைகளை காணும் போது, ‘ நம்ம ஊரு ஜெயலலிதாவின் சிலை எவ்வளவோ பரவாயில்ல போல’ என நெட்டிசன்கள் கிண்டல் அடித்து வருகின்றனர். மேலும் அப்துல்கலாம் சிலையை கண்டு, ‘இது என்ன கொடுமை சார்’ என்றும் விமர்சித்துள்ளனர்.