இந்தியா

மனதின் குரல் வேண்டாம்; செயலின் குரல்தான் தேவை: மோடி மீது ஜார்க்கண்ட் முதல்வர் விமர்சனம்

நிவேதா ஜெகராஜா

கொரோனா தொடர்பான விவகாரத்தில் பிரதமர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ள ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அதன்தொடர்ச்சியாக 'மனதின் குரல் வேண்டாம்; செயலின் குரல்தான் அவசியம்' என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகம் இருக்கும் 10 மாநிலங்களில் ஒன்று ஜார்கண்ட். அங்கு கொரோனா உயிரிழப்புகள் அதிகம் நிகழ்ந்து வருகின்றன. இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி நேற்று கொரோனா நிலவரம் தொடர்பாக பல்வேறு மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்தினார். காணொலி வாயிலாக நடந்த இந்தக் கூட்டத்தில் ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ஒடிசா, ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் கலந்துகொண்டனர்.

இந்தக் கூட்டத்துக்கு பின் பிரதமர் மோடியின் செயல்களை விமர்சித்த ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், " 'மன் கி பாத்' நிகழ்ச்சியில் பேசுவது போல பிரதமர் மோடி மனதில் பட்டதை பேசினார். கொரோனா விவகாரத்தில், முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளைப் பற்றி பேசவில்லை; மாநிலங்கள் சந்திக்கும் பிரச்னைகளை காதுகொடுத்து கேட்கவில்லை; அப்படிச் செய்திருந்தால், அது நன்றாக இருந்திருக்கும்" என்று வெளிப்படையாக விமர்சனம் செய்திருந்தார்.

மேலும், 'மனதில் குரல்' ஆக இல்லாமல், செயலின் குரல் ஆக இருப்பதே இப்போதைய அவசியம் என்றும் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன், அந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி முன்பு தனது மாநிலம் தொடர்பான பிரச்னைகளைப் பேச அனுமதி கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதால், அதிருப்தி அடைந்த சோரன் இப்படி வெளிப்படையாக விமர்சித்து இருக்கிறார் எனக் கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகம் இருக்கும் 10 மாநிலங்களில் ஒன்றான ஜார்கண்டில், நேற்று மட்டும் கொரோனாவால் 133 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக மாநிலத்தில் இறப்புக்களின் எண்ணிக்கை 3,479 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்று நோயின் தேசிய இறப்பு விகிதம் 1.10 சதவீதம் இருக்கும் நிலையில், ஜார்கண்ட் மாநிலத்தின் இறப்பு விகிதம் 1.28 சதவீதமாக உள்ளது. இதையடுத்தே மத்திய அரசின் உதவியை ஹேமந்த் சோரன் எதிர்பார்த்து வருகிறார்.

இதற்கிடையே, சோரனின் இந்த விமர்சனத்துக்கு ஜார்க்கண்ட் மாநில பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். பா.ஜ.க மூத்தத் தலைவர் பாபுலால் மரன்டி வெளியிட்டுள்ள கண்டனத்தில் "ஹேமந்த் சோரன் தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாமல், பிரதமர் மோடி மீது தேவையில்லாத குற்றச்சாட்டுகளை சுமத்துகிறார். அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தாமல் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை அவர் மோடி மீது சுமத்தி வருகிறார்" என்று கூறியிருக்கிறார்.