இந்தியா

”ஆணாதிக்க மனப்பான்மை மாறி வருகிறது” - நாகாலாந்தின் முதல் பெண் MLA ஆனார் ஹேக்கானி!

JananiGovindhan

திரிபுரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து ஆகிய மூன்று வடகிழக்கு மாநில தேர்தல்களில் பதிவான வாக்குகள் காலை முதல் தொடங்கி எண்ணப்பட்டு வருகின்றன. அதன்படி நாகாலாந்தில் 60 தொகுதிகளுக்கான சட்டப்பேரவை தேர்தல் கடந்த பிப்ரவரி 27ம் தேதி நடத்தப்பட்டது.

அதில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டுள்ளன. அதன்படி நாகாலாந்தில் ஏற்கெனவே ஆட்சியில் இருக்கும் பாஜக மற்றும் தேசிய ஜனநாயக முன்னேற்ற கட்சி கூட்டணிதான் தற்போது முன்னிலையில் உள்ளன.

இதுவரைக்கும் வந்த முன்னிலை மற்றும் முடிவு நிலவரப்படி பாஜக கூட்டணி 17 இடங்களிலும் முன்னிலை வகித்ததோடு 19 தொகுதிகளிலும் வெற்றியும் பெற்றிருக்கிறது. இதில் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சியின் பெண் வேட்பாளரான ஹேக்கானி ஜக்காலு முதல் முறையாக நாகாலாந்து சட்டப்பேரவைக்கு சட்டமன்ற உறுப்பினராக அடியெடுத்து வைக்கப் போகிறார்.

நாகாலாந்து பேரவை வரலாற்றில் ஹேக்கானிதான் அம்மாநிலத்தின் முதல் பெண் எம்.எல்.ஏ என்ற பெருமையை பெற்றிருக்கிறார். திமாபுர் - 3 தொகுதியில் போட்டியிட்ட ஹேக்கானி 1,536 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியை ருசித்திருக்கிறார்.

அமெரிக்காவில் சட்டம் பயின்ற ஹேக்கானிக்கு 48 வயதாகிறது. இவர் Youth net என்ற லாப நோக்கமற்ற அமைப்பை உருவாக்கி, கடந்த இரண்டு தசாப்தங்களாக இளைஞர்களுக்கு கல்வி கற்று கொடுத்தும், அதன் பிறகு வாழ்க்கைக்கான திறன்களையும் பயிற்றுவித்தும் வருகிறார். இந்த சேவையே ஹேக்கானியை முதல் சட்டமன்ற உறுப்பினராகும் பெறுமையை பெற காரணமாக இருந்திருக்கிறது.

முன்னதாக தேர்தல் பிரசார சமயங்களில், “நாகாலாந்தில் உள்ள சமூகம் பெரும்பாலும் ஆணாதிக்க மனப்பான்மையையே கொண்டிருக்கும். அது தற்போது மாறி வருகிறது. இந்த மாறிய மனநிலை தேர்தலிலும் பிரதிபலிக்கும்.” என ஹேக்கானி கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.