ஒரே நாளில் 7 அடி உயர்ந்த முல்லைப் பெரியாறு அணை pt desk
இந்தியா

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்யும் கனமழை - ஒரே நாளில் 7 அடி உயர்ந்த முல்லைப் பெரியாறு அணை

மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது.

PT WEB

செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்

முல்லைப் பெரியாறு அணையின் முக்கிய நீர்ப்பிடிப்பு பகுதிகளான இடுக்கி மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய குமுளி, தேக்கடி, வண்டிப்பெரியாறு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் நேற்று (13.12.24) 120.65 அடியாக இருந்த முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் மாலை 6 மணிக்கு 125.40 அடியாக உயர்ந்தது.

முல்லைப் பெரியாறு அணை

நேற்று காலை 6 மணிக்கு விநாடிக்கு 3,153 கன அடியாக இருந்த அணைக்கான நீர்வரத்து, மாலை 6 மணிக்கு விநாடிக்கு 27,950 கன அடியாக அதிகரித்தது. இதனால் அணையின் நீர் மட்டம் 12 மணி நேரத்தில் 5 அடி உயர்ந்தது. இதனால் தமிழக விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். இந்நிலையில், மழை தொடர்ந்து பெய்து வருவதால் இன்று காலை நிலவரப்படி முல்லைப் பெரியாறு அணையில் 54 மில்லி மீட்டர் மழையும், தேக்கடியில் 100 மில்லி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது.

இதனால் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 17,652 கன அடியாக தொடர்கிறது. அணையின் நீர்மட்டம் நேற்று மாலைக்குப் பின் மீண்டும் இரண்டு அடி உயர்ந்து, 127.65 அடியாகி ஒரே நாளில் 7 அடி உயர்ந்துள்ளது. நேற்று மாலை தமிழகத்திற்கான நீர் திறப்பு வினாடிக்கு 1,200 கன அடியாக இருந்தது. இன்று காலை நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது. அணையில் நீர் இருப்பு 4,190 மில்லியன் கன அடியாக உள்ளது.

முல்லைப் பெரியாறு

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து நீர் திறப்பு எந்நேரமும் அதிகரிக்க கூடும் என்பதால் முல்லைப் பெரியாற்றின் நீர் வழித்தடங்களான லோயர் கேம்ப் முதல் வைகை அணை வரையில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாற்றை கடக்கவோ குளிக்கவோ முயற்சிக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.