இந்தியா

மழை வெள்ளத்தில் தத்தளிக்கும் மும்பை : கொரோனா தனிமைப்பகுதிகளிலும் வெள்ளநீர்..!

webteam

மும்பையில் பெய்த கனமழையில் நகர்ப்புற மற்றும் புறநகர்ப் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.

மகாராஷ்டிராவின் தானே மற்றும் கொங்கன் பகுதிகளின் சுற்றுவட்டாரத்தில் கனமழை பெய்துள்ளது. அத்துடன் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் கடும் மழைப்பொழிவு ஏற்பட்டுள்ளது. தெற்கு மும்பை பகுதியில் கடந்த 24 மணி நேரத்தில் 129.6 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளதாக இந்திய வானிலை தெரிவித்துள்ளது.

இதுதவிர மும்பையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளில் 200.8 மிமீ மழை பெய்திருப்பதாகவும், இதனால் பல பகுதியில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. விதர்பா பகுதியில் மிதமான மழையும், கொரோனா தொற்றால் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இடியுடன் கூடிய மழையும் பெய்துள்ளது. 

இதனால் மும்பையின் பல பகுதிகளில் சாலைகள் மழை நீரால் மூழ்கியுள்ளன. பல இடங்களில் போக்குவரத்து தடை பட்டுள்ளது. மக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர். மேலும், அடுத்த 24 மணி நேரத்தில் மும்பை மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் எனவும் இந்திய வானிலை மையம் எச்சரித்துள்ளது.