இந்தியா

கோட்டயம், இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை - பலி எண்ணிக்கை உயர்வு

Sinekadhara

கேரளாவில் வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு என இயற்கை கொடுத்த இன்னல்களால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 38 ஆக அதிகரித்துள்ளது.

கோட்டயம் மற்றும் இடுக்கி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்த கனமழையால் பலர் வீடு உடைமைகளை இழந்து தவித்து வருகின்றனர். எங்கெங்கு காணினும் வெள்ளமாக காட்சியளிக்கிறது. இந்த நிலையில் நாளைமுதல் மீண்டும் தொடர் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வுமையம் கணித்திருக்கிறது. அம்மாநிலத்தில் உள்ள முக்கிய அணைகளான இடுக்கி, இடமலையார், பம்பை ஆகியவற்றில் நீர்வரத்து அதிகமுள்ள நிலையில் அவற்றின் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன. பாதுகாப்பு கருதி கரையோரப் பகுதிகளில் வசிக்கும் 2 ஆயிரத்து 500 குடும்பங்களை சேர்ந்த சுமார் பத்தாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர். 240 முகாம்கள் அமைக்கப்பட்டு அவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

பூவாஞ்சி, கோக்கயார் ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் ஏழு வீடுகள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. அங்குள்ள மணிமாலா ஆற்றிலிருந்து 6 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மின் இணைப்பு இல்லாததால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். எங்கும் வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்யக்கூட இடம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர்.