மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் பகுதியை பிரித்து கூர்க்காலாந்து என்ற தனி மாநிலம் அமைக்கக் கோரி காலவரையற்ற முழு அடைப்புப் போராட்டம் நடந்து வருகிறது.
’கூர்க்கா ஜனமுக்தி மோர்ச்சா’ அமைப்பு சார்பில் நடைபெற்று வரும் போராட்டத்தால் பள்ளி, கல்லூரிகள், கடைகள், உணவு விடுதிகள் கடந்த ஒரு மாதமாக மூடப்பட்டுள்ளன. இந்த போராட்டத்தில் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. இன்று டார்ஜிலிங்கில் உள்ள அரசு அலுவலகங்கள் மீது போராட்டக்காரர்கள் தீ வைத்து வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் சுற்றுலா அலுவலகத்தில் தீ பிடித்து எரிந்தது. சுற்றுலா அலுவலகத்தில் இருந்த கணினிகள் முற்றிலும் எரிந்து சாம்பலாகின. இதே போன்று நேற்று சவுராஸ்தா-மால் சாலையில் உள்ள கூர்க்காலாந்து பிராந்திய நிர்வாக அலுவலகத்துக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். இதுதவிர, கயாபரி பகுதியில் உள்ள ரயில் நிலையத்திற்கும், தீஸ்தா நதிக்கரையில் உள்ள காட்டு பங்களா ஒன்றுக்கும் தீ வைக்கப்பட்டது.
இந்தப் போராட்டத்தால் டார்ஜிலிங்கில் போலீசார், ராணுவம் மற்றும் துணை ராணுவப்படைகள் குவிக்கப்பட்டுள்ளது.