ஊட்டி எக்ஸ் தளம்
இந்தியா

தாக்கும் வெப்ப அலை.. மலைவாசஸ்தலங்களுக்கு டூர் போறீங்களா? இதை கவனத்தில் கொள்ளுங்கள்!

இமாச்சலப் பிரதேசத்தின் சில தனித்த பகுதிகளில், இயல்பைவிட மிகவும் அதிகமான வெப்பநிலை காணப்படுகிறது.

Prakash J

இந்த கோடையில் நீங்கள் மலைவாசஸ்தலத்திற்குப் பயணம் செல்லத் திட்டமிட்டிருந்தால், தாராளமாகச் செல்லுங்கள், ஆனால் எச்சரிக்கையுடனும், முன்னேற்பாடுடனும் செல்லுங்கள். பயணம் செய்வதற்கு முன் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) முன்னறிவிப்புகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள்.

இந்தியா முழுவதும் வெப்ப அலையின் தாக்கம் அதிகரித்து வருகிறது. தமிழ்நாட்டிலும் அதன் தாக்கம் எதிரொலிக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதத்தை தாண்டி அடிக்க ஆரம்பித்துவிட்டது. குறிப்பாக, இந்த ஆண்டு இந்தியா முழுவதும் வெப்ப அலைகள் வழக்கத்தைவிட முன்னதாகவே வந்துவிட்டன. வழக்கமாக கோடைக்காலம் உச்சக்கட்டம் தொடங்குவதற்கு பல வாரங்களுக்கு முன்பே, ஏப்ரல் மாதத்திலேயே பல பகுதிகளில் கடும் வெப்பநிலை பதிவாகியுள்ளது.

உத்தரகாண்ட்

2026 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) பருவகால முன்னறிவிப்பு, கிழக்கு, மத்திய, வடமேற்கு இந்தியா மற்றும் தென்கிழக்கு தீபகற்பத்தின் சில பகுதிகளில் இயல்பைவிட அதிகமான வெப்ப அலை நாட்கள் நிலவக்கூடும் என எச்சரிக்கிறது. இதனால், இந்தியாவின் மலைவாசஸ்தலங்களையும் வெப்பம் தாக்கி வருகிறது. குறிப்பாக, இமாச்சலப் பிரதேசத்தின் சில தனித்த பகுதிகளில், இயல்பைவிட மிகவும் அதிகமான வெப்பநிலை காணப்படுகிறது.

முசோரி மற்றும் நைனிடால் அமைந்துள்ள உத்தரகாண்டிலும் இதேநிலை காணப்படுகிறது. முசோரியில் ஏப்ரல் 26 அன்று அதிகபட்ச வெப்பநிலை 30°C ஆகப் பதிவானது. இது வரலாற்றைவிட அதிகம். அதேபோல், நைனிடாலும் சமீபத்திய நாட்களில், அதிகபட்சமாக சுமார் 30°C வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளது. இவைதவிர, இந்த ஏப்ரல் மாதம் சிம்லாவில் வெப்பநிலை 27°C-ஐத் தாண்டியது, இது இயல்பைவிட 2 முதல் 7°C அதிகமாகும். அதேநேரத்தில், மணாலியில் அதிகபட்ச வெப்பநிலை 25.4°C ஆகப் பதிவானது. இவ்விரண்டுமே பருவகால சராசரியைவிட அதிகம். அதேபோல், ஜம்மு காஷ்மீரின் சில தனித்த பகுதிகளில் கடும் வெப்ப அலை நிலவ அதிக வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் திட்டவட்டமாக எச்சரித்துள்ளது.

ஊட்டி

இதுபோக இன்றைய தேதி நிலவரப்படி டேராடூன் (29°C), லானாவாலா (35°C), கரிஜாத் (41°C), ஊட்டி (24°C), மூணாறு (26°C), குல்மர்க் (18°C) ஆகிய நிலைகளில் வெப்பம் பதிவாகியுள்ளது. இதையடுத்து, இந்த கோடையில் நீங்கள் மலைவாசஸ்தலத்திற்குப் பயணம் செல்லத் திட்டமிட்டிருந்தால், தாராளமாகச் செல்லுங்கள், ஆனால் எச்சரிக்கையுடனும், முன்னேற்பாடுடனும் செல்லுங்கள். பயணம் செய்வதற்கு முன் இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) முன்னறிவிப்புகளைச் சரிபார்த்துக் கொள்ளுங்கள். மலைவாசஸ்தலங்களிலும் கூட வெப்பநிலை அதிகமாக இருக்கக்கூடும், ஆகவே முன்னதாக அந்த இடத்தின் காலநிலை பார்த்து செல்லுங்கள். கூட்டம் குறைவான, பாதுகாப்பான இடங்களை தேர்வு செய்யுங்கள். மேலும், தாக்கும் வெப்ப அலை காரணமாக சில முக்கிய விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். அதிக தண்ணீர் குடிக்க வேண்டும்; உடல் நீர்ச்சத்து குறையாமல் பார்த்துக்கொள்ளுங்கள். லேசான, குளிர்ச்சியான உடைகள் அணியுங்கள். வெயிலில் நேரடியாக நீண்ட நேரம் இருக்க வேண்டாம். அதிக வெப்பம் இருக்கும் மதியம் நேரத்தை தவிர்த்து, காலை அல்லது மாலை நேரங்களில் பயணம் செய்யுங்கள்.