இந்தியா

இடம் மாறிய இதயம்: சிரிக்கும் சிறுவன் சங்கேத்

இடம் மாறிய இதயம்: சிரிக்கும் சிறுவன் சங்கேத்

Rasus

நம் எல்லோருக்கும் இதயம் இடது பக்கம்தான் இருக்கும். ஆனால் மகாராஷ்ட்டிர மாநிலம் அவுரங்காபாத்தைச் சேர்ந்த சங்கேத் என்ற சிறுவனுக்கு இதயம் வலது பக்கத்தில் இருந்திருக்கிறது.

இதயம் மட்டுமல்லாமல் இதய அறைகளும் இடம் மாறி பிறந்துள்ளான் சங்கேத். ஆனால் இது அவர்களின் பெற்றோருக்குத் தெரியாமலே இருந்திருக்கிறது. நண்பர்களுடன் விளையாடும் போது அடிக்கடி அவனது தோல் நீல நிறமாக மாறி விடும். இது என்ன குறைபாடு என்று பல மருத்துவர்களைப் பார்த்தனர் அவனது பெற்றோர். கடைசியாக அவர்கள் பிரச்னைக்கு மும்பை, ரிலையன்ஸ் ஃபவுண்டேஷன் மருத்துவமனையின், தலைமை இதயவியல் நிபுணர் ஷிவபிரகாஷ் கிருஷ்ணநாய்க்கின் மூலமாக விடியல் கிடைத்திருக்கிறது.

இதய அறைகளான ஆர்டரிகள் மற்றும் வெண்ட்ரிக்குள் இரண்டும் இடம் மாறியிருப்பதுடன் (Congenital Transposition of the arteries and ventricles), இதயமே இடதுபக்கமாக இருப்பதற்கு பதிலாக வலப்பக்கம் இடம் மாறியிருக்கிறது. அதுமட்டுமில்லாமல், இதயத்தில் ஒரு ஓட்டை வேறு இருக்கிறது’ என்று அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி கொடுத்திருக்கிறார் அந்த டாக்டர்.

அதிர்ச்சியுடன் சேர்த்து சங்கேத்துக்கு நம்பிக்கையையும் கொடுத்த ஷிவப்ரகாஷ், இதய அறைகளை சரியான இடங்களில் பொருத்தி, நுரையீரலுக்கு செல்லும் ஆர்டரியை பசுவின் இதயகுழாயைப் பயன்படுத்தி விரிவாக்கி, இதய ஓட்டையையும் சரிசெய்து, மிகுந்த நிபுணத்துவம் தேவைப்பட்ட இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை ஆறு மணி நேரத்தில் முடித்திருக்கிறார்.

’அறுவை சிகிச்சை குறித்து பயத்துடன் இருந்தோம். சங்கேத் கண்விழித்தவுடன் கிச்சடி கேட்டான்’ என்று மகிழ்ச்சியுடன் சொல்கிறார் சங்கேத்தின் அம்மா துவாரகா. சங்கேத் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அழகாக சிரிக்கிறார். இனி அவர் ரஜினிகாந்தைப் போல, ’நான் புத்திய கேட்டு வேல செய்யல, இத கேட்டு வேல செய்யறேன்னு’ இடதுபக்கம் இதயத்தைத் தட்டி டயலாக் பேசலாம்.

சங்கேத்தின் பெற்றோர் சாதாரண விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். பல தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் அவர்கள் மகனைக் காப்பாற்றியிருக்கின்றனர். இதுபோன்ற அரிய வகை குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தனிகவனம் வேண்டும் என்று அரசுக்கு அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.