இந்தியா

பட்ஜெட் தாக்கல் முதல் கொரோனா உயிரிழப்பு வரை - சில முக்கியச் செய்திகள்!

பட்ஜெட் தாக்கல் முதல் கொரோனா உயிரிழப்பு வரை - சில முக்கியச் செய்திகள்!

webteam

மத்திய பட்ஜெட்டில் தனி நபர் வருமான வரி விகிதங்களைக் குறைத்து புதிய நடைமுறை அறிவிப்பு. விருப்பப்படுவோர் பழைய நடைமுறையை தேர்வு செய்து கொள்ளவும் வாய்ப்பு.

புதிய வருமான வரி நடைமுறையை தேர்வு செய்வோருக்கு வரி விலக்குகள், கழிவுகள் கிடையாது. பழைய முறையை தேர்வு செய்தால் வரி விகிதங்களில் மாற்றமில்லை.

தொன்மைமிக்க ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு. 150 ரயில்கள் தனியார் துறை பங்களிப்புடன் இயக்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் தகவல்.

சிந்து சமவெளி நாகரிகத்தை பட்ஜெட்டில் சிந்து சரஸ்வதி நாகரிகம் என குறிப்பிட்டதால் புதிய சர்ச்சை. புராணத்தை வரலாறாக மாற்றும் முயற்சி என தமிழக தலைவர்கள் குற்றச்சாட்டு.

எல்ஐசி நிறுவனத்தில் அரசின் பங்குகளில் ஒரு பகுதி விற்கப்படும் என்று பட்ஜெட்டில் அறிவிப்பு. தனியார்மயமாக்கும் நடவடிக்கையை கண்டித்து வரும் 4ஆம் தேதி வெளிநடப்புப் போராட்டம் நடைபெறும் என ஊழியர் சங்கங்கள் அறிவிப்பு.

வரி அதிகரிப்பால் சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருட்கள், இறக்குமதி செய்யப்படும் மின்விசிறிகள், பொம்மைகளின் விலை உயரும். வரி குறைப்பு காரணமாக மின்சார வாகனங்கள், விளையாட்டுப் பொருட்களின் விலை குறைய வாய்ப்பு.

இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை அதிகரிக்கும் பட்ஜெட் என பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு. வேலைவாய்ப்பை உருவாக்கும் திட்டம் பட்ஜெட்டில் இல்லை என்று ராகுல் காந்தி விமர்சனம்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் பட்ஜெட் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரவேற்பு. பா.ஜ.க. விரும்பும் கலாசார திணிப்பை செய்யும் நிதிநிலை அறிக்கை என மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு.

தஞ்சை பெரியகோயிலில் குடமுழுக்கிற்கான ஏற்பாடுகள் மும்முரம். தென்னக பண்பாட்டு மையம் சார்பில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளும் அரங்கேற்றம்.

குரூப் 2ஏ முறைகேடு தொடர்பாக காவலர் சித்தாண்டியின் சகோதரர் உட்பட இருவர் கைது. பணியில் இருக்கும் 42 அதிகாரிகளிடம் விசாரணை நடத்தவும் சிபிசிஐடி திட்டம்.

சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை வழக்கில் 15பேர் குற்றவாளிகள் என தீர்ப்பு. தண்டனை விவரத்தை நாளை அறிவிக்கிறது சென்னை சிறப்பு நீதிமன்றம்.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 300ஐ தாண்டியது. தாய்லாந்து, சிங்கப்பூர் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியா வரும் பயணிகளுக்கும் மருத்துவ பரிசோதனை நடத்த மத்திய அரசு அறிவுறுத்தல்.