இந்தியா

"லால் எப்போதும் ஆபத்தை விரும்புவார்" - டெல்லி சக காவலர்கள் உருக்கம் !

subramani

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராக டெல்லியில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ட்ரம்ப் இந்தியா வந்திருக்கும் நிலையில் நேற்று டெல்லியில் நடந்த கலவரத்தில் ரத்தன் லால் என்ற தலைமைக் காவலர் உயிரிழந்தார்.

42 வயதான ரத்தன் லால், 1998 ஆம் ஆண்டு டெல்லி காவல்துறையில் இணைந்தார். கோகுல்புரி காவல்நிலையத்தில் பணி செய்து வந்த லால் பற்றி அவருடன் வேலை செய்தவர்கள் குறிப்பிடும் போது “ரத்தன் லால் மிகவும் துணிச்சலான நபர். கடந்த வருடங்களில் அவர் கலவரக்காரர்கள், சமூக விரோதிகளை துணிச்சலாக எதிர்த்து களமாடியிருக்கிறார் ” என்றனர்.

ராஜஸ்தானைச் சேர்ந்த சராசரி நடுத்தர குடும்பத்தில் பிறந்தவர் ரத்தன் லால், அவர் தனது மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் டெல்லியில் வசித்து வந்தார். இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் வசித்து வந்த ரத்தன் லால், டெல்லியில் நடந்து வரும் கலவரத்தில் நேற்று கொல்லப்பட்டுள்ளார்.

ரத்தன் லாலின் இளைய சகோதரர் கூறும்போது “எங்கள் அண்ணன் மிகுந்த நாட்டுப்பற்று கொண்டவர். சிறுவயதில் இருந்தே சீருடைப் பணியில் சேரவேண்டும் என்ற ஆசை அவருக்கு இருந்தது. மிகவும் பொறுமையான மனிதர். அதே நேரம் லால் இதுவரை பயந்து நாங்கள் பார்த்ததே இல்லை.” என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், “போராட்டக்காரர்கள் வன்முறையை கைவிட வேண்டும். இன்று என் சகோதரரின் உயிர்ப்போனது. நாளை இன்னொருவருக்கு இது நிகழலாம். எனவே வன்முறை வேண்டாம்.” என்று கேட்டுக் கொண்டார்.

ரத்தன் லாலுடன் வேலை செய்யும் சககாவலர் ஒருவர் கூறும் போது “லால் எப்போதும் ஆபத்தான வேலைகளையே விரும்புவார். 2013’ல் இரண்டு பழங்குடிப் பெண்கள் பாலியல் தொல்லைக்கு ஆளானது தொடர்பான வழக்கில் லாலின் அர்ப்பணிப்பும் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க அவர் காட்டிய துணிச்சலும் எப்போதும் நினைவு கூறப்படும் ” என்றார்.

தற்போது லாலின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கிறது. எது எப்படியோ வன்முறை எந்த ஒரு பிரச்னைக்கும் தீர்வாக அமையாது என்பதை போராட்டக்காரர்களும், காவல்துறையும், அரசாங்கமும் புரிந்துக்கொள்ள வேண்டும்.