இந்தியா

“ரூ.30,000 பணத்திற்காக செய்தேன்” - ஹெச்டிஎப்ஃசி நிர்வாகி கொலையில் குற்றவாளி வாக்குமூலம்

rajakannan

ஹெச்டிஎப்ஃசி வங்கியின் துணை தலைவர் சித்தார்த் சங்வி கொலையில் சந்தேக முடிச்சுகள் விழுந்த நிலையில், 30 ஆயிரம் ரூபாய் பணத்திற்காக அவர் கொல்லப்பட்ட அதிர்ச்சித்தகவல் வெளியாகி உள்ளது.

மும்பையில் ஹெச்டிஎப்ஃசி வங்கியின் துணைத் தலைவராக பணிபுரிந்து வந்தவர் 39 வயதான சித்தார்த் சங்வி. கடந்த புதன்கிழமை, கமலா மில்ஸ் பகுதியில் உள்ள தனது அலுவலகத்துக்கு சென்ற அவர் வீடு திரும்பவில்லை. குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வியாழக்கிழமை நவி மும்பை அருகே சித்தார்த் சங்வியின் கார் கண்டுபிடிக்கப்பட்டது, அதில் கத்தி மற்றும் ரத்தக் காயங்கள் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என காவல்துறையினர் சந்தேகித்தனர். தொழில் போட்டியில் அவர் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வந்தது. 

இந்த நிலையில் சித்தார்த்தின் தந்தைக்கு திடீரென வந்த செல்போன் அழைப்பில் அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதனை டிரேஸ் செய்த காவல்துறையினர் சித்தார்த்தின் செல்போனில் வேறு சிம் கார்டை பொருத்தி சர்பஃராஸ் ஷேக் என்பவர், போன் செய்ததை கண்டறிந்து அவரை கைது செய்தனர். அவரிடம் நடந்த விசாரணையில், அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன. 

சர்பஃராஸ் ஷேக், சித்தார்த்தின் அலுவலகம் அமைந்துள்ள கட்டடத்தின் வாகன நிறுத்தப் பகுதியில் பணிபுரிந்து வந்துள்ளார். தன்னுடைய இருசக்கர வாகனத்திற்கு 30 ஆயிரம் ரூபாய் கடன் செலுத்த வேண்டி இருந்த நிலையில், சித்தார்த்திடம் அந்த பணத்தை கொள்ளை அடிக்க திட்டமிட்டுள்ளார். சித்தார்த் காரில் ஏறி புறப்பட்ட போது அவரை தாக்கி கொள்ளை அடிக்க முயன்றதாகவும் சித்தார்த் கூச்சலிட்டதால் அவரை கத்தியால் குத்தி கொலை செய்ததாகவும் குற்றத்தை ஒப்புக் கொண்டுள்ளார். 

கொலை செய்து சித்தார்த்தின் உடலை, தானே கல்யாண் பகுதியில் வைத்துவிட்டு, காரை நவி மும்பையில் விட்டதாகவும் அவர் தெரிவித்ததை அடுத்து காவல்துறையினர் அப்பகுதிக்கு சென்று சித்தார்த்தின் உடலை மீட்டனர். சர்பஃராஸ் ஷேக் மீது கொலை, கொள்ளை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.