இந்தியா

குமாரசாமி என்னை எதிரியாக பார்த்ததே ஆட்சிக் கவிழ காரணம்: சித்தராமையா

webteam

’குமாரசாமி, என்னை எதிரியாக பார்த்ததே, கர்நாடகாவில் கூட்டணி ஆட்சி கவிழ்வதற்கு காரணம்’ என்று அம்மாநில முன்னாள் முதலமைச்சரும் காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் குமாரசாமி தலைமையில் நடந்து வந்த காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி ஆட்சி, கடந்த மாதம் கவிழ்ந்ததை அடுத்து புதிய முதலமைச்சராக எடியூரப்பா பதவியேற்றார். இந்நிலையில் கூட்டணி ஆட்சிக் கவிழ்ந்ததற்கு யார் காரணம் என்பது தொடர்பாக காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் தலைவர்கள் இடையே மோதல் ஏற்பட்டு வருகிறது.

இந்நிலையில், முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ’’சித்தராமையாவுக்கு நான் முதல மைச்சரானதை சகித்துக்கொள்ள முடியவில்லை. தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்களை, அரசுக்கு எதிராகச் செயல்படும்படி தூண் டியவர் அவர்தான். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமாவுக்கு அவர்தான் காரணம்’’ என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சித்தராமையா, ‘’குமாரசாமி, என்னை நண்பராகவோ, நம்பிக்கைக்குரியவராகவோ ஒரு போதும் பார்க்கவில்லை. அவர் என்னை எதிரியாகவே பாவித்தார். இதுதான் அனைத்துப் பிரச்னைகளுக்கும் காரணம்’’ என்று தெரிவித்துள்ளார்.