இந்தியா

‘மகனுக்கு தடபுடலான கல்யாணம் இல்லை.. எளிமையான திருமணம்’ - குமாரசாமி அறிவிப்பு 

webteam
 கொரோனா அச்சுறுத்தல்களுக்கான தடை நீங்கிய சில தினங்களுக்குள்ளாகவே வரும் 17 ஆம் தேதி கர்நாடக முன்னாள் முதல்வர் குமாரசாமியின் மகன் திருமண விழா நடைபெற உள்ளது.
உலகையே கொரோனா வைரஸ் ஆட்டிப்படைத்து வருகிறது. ஆயிரக்கணக்கான உயிர்களை இதுவரை உலகம் இழந்துள்ளது. கொரோனா கோரத்தாண்டவம் உலகத்தில் எந்த ஒரு பகுதியையும் விட்டு வைக்கவில்லை. நல்ல நிகழ்ச்சிகள், சந்தோஷமான விழாக்கள் இல்லாமல் இன்று உலகமே ஒரு மூலைக்குள் முடங்கிப் போய் உள்ளது. தினமும் மரணச் செய்திகள் தான் தலைப்புச் செய்திகளாகி உள்ளன.
நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால் நடமாட்டம் இல்லாமல் வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன. சாலைகளில் பிதுங்கி வழிந்த வானக நெரிசல்கள் இல்லை. இதுவரை பார்க்காத ஒரு பேரமைதி சாலைகளில் நிலவுகிறது. ஒரு ஹாரன் சத்தம் கேட்டு வாரக் கணக்கான நாட்கள் கடந்துவிட்டன. தெருக்களில் காய்கறி விற்பவர்கள், பழைய பொருட்களை வாங்குபவர்கள் என யாருடைய குரலையும் கேட்க முடியாமல் உள்ளது. 
இந்தக் களேபரத்திற்கு இடையில் ஒரு மகிழ்ச்சியான நிகழ்ச்சி அண்டை மாநிலத்தில் நடக்கப் போகிறது. அதுவும் ஒரு விவிஐபி வீட்டில். யார் என்கிறீர்களா? கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் ஹெச்.டி. குமாரசாமி வீட்டில்தான். இந்த ஊரடங்குக்கு இடையிலும்  அவரது மகன் நிகிலின் திருமணம் ஏப்ரல் 17 ஆம் தேதி தங்களது வீட்டில் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார். இன்று பெங்களூரு ராமநகரில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், ஏப்ரல் 17 ஒரு "நல்ல நாள்" என்பதால் திருமணம் ரத்து செய்யப்படாது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர், "நாங்கள் ஒரு பெரிய திருமணமாக இதைக் கொண்டாடவில்லை. இரு குடும்பங்களைச் சேர்ந்த நடந்த திட்டமிட்டுள்ளோம். மண விழாவிற்கு சுமார் 15 முதல் 20 பேர் அழைக்கப்பட்டுள்ளனர். இது எங்கள் வீடு ஒன்றில் நடைபெறும். சரியான நேரம்  வந்தவுடன் தனியே நாங்கள் ஒரு கொண்டாட்டத்தை நடத்துவோம்" என்று குமாரசாமி கூறினார். 
மேலும்  "கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் அது தொடர்பான பொதுச் சுகாதார பிரச்சினைகள் தீர்ந்தவுடன், ராமநகர மாவட்டத்தில் ஒரு பெரிய கொண்டாட்டத்தை ஏற்பாடு செய்வதற்கான திட்டம் உள்ளது" என்று குமாரசாமி செய்தியாளர்களிடம் கூறினார்.